ஆசிரியரை இடமாற்றக் கோரி மட்டக்களப்பில் போராட்டம்

மட்டக்களப்பு – கல்லடி, உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக ஆசிரியர் ஒருவரை இடமாற்றம் செய்யுமாறு கோரி பெற்றோர் மற்றும் பாடசாலை பழைய மாணவர்களினால் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் சற்றுநேரம் பதற்ற நிலைமையேற்பட்டது.

இலங்க ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும் குறித்த பாடசாலையின் ஆசிரியருமான பொ.உதயரூபனை குறித்த பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்யுமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கையில்,

குறித்த ஆசிரியர் மீது, 41குற்றச்சாட்டுகள் மாவட்ட கல்வித் திணைக்களத்தில் முறையிடப்பட்டுள்ள நிலையில் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் பாடசாலையில் பல குழப்பமான செயற்பாடுகளை குறித்த ஆசிரியர் முன்னெடுத்துவருவதுடன் சில ஆசிரியர்கள் அவரின் அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டதாகவும் கூறப்படுகின்றது.

இதன் காரணமாக பாடசாலையில் மாணவர்களில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளரின் சார்பில் வருகைதந்த மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி சா.ரவிச்சந்திரா ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களினால் வழங்கப்பட்ட மகஜரை மாகாண கல்வி பணிப்பாளருக்கு அனுப்பி நடவடிக்கையெடுப்பதாக வழங்கிய உறுதிமொழியையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

இதேவேளை, பாடசாலைகள் கதவுகள் மூடப்பட்டு ஆசிரியர்கள், மாணவர்கள் உள்செல்ல அனுமதிக்கப்படாமல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *