பாகிஸ்தானில் அரங்கேறிய கொடூரம் மிலேச்சனத்தின் அதியுச்சம்

பாகிஸ்தானின் சியால்கோட் நகரிலுள்ள தனியார் ஏற்றுமதி தொழிற்சாலையொன்றில் பொதுமுகாமையாளராக பணியாற்றிய வந்தவர் பிரியந்த குமார தியவடன. 48வயதான இவர் பேரதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்பதோடு, கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அங்கு பணியாற்றியும் வருகின்றார்.

இவர், கடந்த மூன்றாம் திகதி வெள்ளிக்கிழமை குறித்த தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளார்.

இவரது கொலை இலங்கை, பாகிஸ்தான் இருதரப்பு உறவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் பகிரங்கமாகவே கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தின் சபை முதல்வரும், கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன நாடாளுமன்றத்திலேயே இந்தக் கொடூர சம்பவத்தினைக் கண்டிப்பதாகவும், சட்டத்தின் முன் குற்றவாளிகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதனைவிடவும், எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தமது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் கொடூரத்தினைப் புரிந்த அனைவரும் சட்டத்தின் முன் நிலைநாட்ட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

இதனைவிடவும், உலகளாவிய ரீதியில் உள்ள மனித உரிமைகள் அமைப்பினர், ஜனநாயகத்தினைப் பாதுகாக்கும் அமைப்பினர் மற்றும் சர்வதேச மன்னிப்புச்சபை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட அனைத்து தரப்பினருமே இக்கொடூர கொலைக்கு கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தில் முழுமையான தகவல்களை வெளியிடாது அமைதிகாக்கின்றது. அதற்கு உள்நாட்டில் குழப்பங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்ற கரிசனை இருக்கலாம்.

ஆனால், குறித்த நபர் கொடூரமாக தாக்கப்படுவதும் தீயிட்டு கொலை செய்யப்படுவதும் பகிரங்கமாகவே காணொளியின் ஊடாக பகிரப்பட்டுள்ளது. அதில் கொடூரமான சம்பவத்தில் ஈடுபவர்கள் எவரும் தங்களின் அடையாளங்களை மறைத்துக் கொள்ளவில்லை.

இவ்வாறு அவர்கள் அச்சமின்றி ஒரு மனித உயிரினைப்பறிக்கும் உரிமையை கையில் எடுத்தமைக்கு காரணம் இருக்கின்றது. அந்தக் காரணம் தம்மை சட்டத்தின் முன் குற்றவாளியாக நிறுத்தாது என்றே அவர்கள் வெகுவாக நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள்.

ஆம், அன்று மூன்றாம் திகதி வெள்ளிக்கிழமை, பிரியந்த வழக்கம்போலேயே தொழிற்சாலைக்குள் நுழைந்துவிட்டார். ஆனால் அவர் இஸ்லாமிய மதத்திற்கும், நபிகளுக்கும் எதிராகச் செயற்படுகின்றார் என்று கருத்துப் பரிமாற்றங்கள் தீவிரமாக வெளிப்பட ஆரம்பித்தது.

குறிப்பாக, தொழிற்சாலையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை இலங்கை பொதுமுகாமையாளரான குமார தியாவடன கிழித்து குப்பைத் தொட்டியில் வீசி விட்டார். அந்த போஸ்டரில் குர்ஆன் வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு இருந்ததுள்ளன. பொதுமுகாமையாளர் பிரியந்தவின் செயற்பாட்டை அந்தத் தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் தெஹ்ரிக் இ லெப்பெய்க் பாகிஸ்தான் என்ற அமைப்பினரிடத்தில் பகிர்ந்துள்ளனர்.

இதனால், அந்த அமைப்பினைச் சேர்ந்தவர்களும், தொழிலாளர்களுமாக தொழிற்சாலை வாயிலில் கூடியதோடு அக்கூட்டம் தொழிற்சாலையில் உள் நுழைந்து பிரியந்தவை வெளியே இழுத்து வந்தனர். தொழிற்சாலையின் வாயிலில் வைத்து கற்களாலும் கம்புகளால் சரமாரியாக தாக்கி சித்திரவதை செய்தனர்.

இந்த தாக்குதலை சமாளிக்க முடியாது பிரியந்த, தன்னை விட்டுவிடுமாறு உருக்கமாக கோரியபோதும் அவ்வாறு செய்யாது அவரைத் தொடர்ந்து தாக்கினார்கள். இதனால் பிரியந்த உயிரிழந்தார். பின்னர் அவரை தீயிட்டு எரித்தனர். அவருடைய உடல் தீயில் வேகுவதை கண்டு கூட்டத்தில் இருந்தவர்கள் களிப்புற்றனர்.

அதுமட்டுமன்றி, பிரியந்தவின் உடல் தீயில் வேகிக்கொண்டிருந்த வேளையில் அங்கிருந்த சிலர் ‘செல்பி’ களையும் எடுத்திருந்தமை பாகிஸ்தானியர்களின் மனிதாபிமானம் குறித்த மனோநிலையை கேள்விக்கு உள்ளாக்குகின்றது.

இந்தச் சம்பவம் அரங்கேறி நிறைவடையும் வரையில் பொலிஸார் அப்பகுதிக்கு வருகை தந்திருக்கவில்லை. அவசர அழைப்புக்கான பொலிஸாருக்கு அறிவிப்பு வழங்கப்பட்டபோதும் அத்தர்ப்பினர் வருகை தருவதற்குள் அந்த ‘கோரமான துன்பியல் சம்பவம்’ நிறைவடைந்து விட்டது.

குறித்த கொடூரச் சம்பவம் தொடர்பில் ‘பாகிஸ்தான் வெட்கப்பட வேண்டும்’ என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமது நேரடி கண்காணிப்பின் கீழ் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

அதேநேரம், பாகிஸ்தானின் ஜனாதிபதி ஆரிப் அல்வியும் இச்சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ள அதேநேரம் இதுவொரு அவலமான சம்பவம் என பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் ஹு ஸ்மான் புஸ்டார் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தற்போது, வெளியாகியுள்ள மருத்து அறிக்கையில் ‘பிரியந்தவின் தலை முதல் கால் வரையிலான உடற்பாகங்கள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கொடூர கொலை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் பிரகாரம், சிசிரிவி காணொளி மற்றும் தொலைபேசி மூலம் அடையாளம் காணப்பட்ட 200இற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில், 124 சந்தேக நபர்களில் 19 பேர் பிரியந்த குமார தியவதன கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதில் ‘முக்கிய பங்கு வகித்தவர்கள்’ என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறிருக்க, பிரியந்த குமார தியவதன படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 13 பேர் குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களை தொடர்ந்தும் காவலில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விசாரணைகள் எவ்வளவு தூரம் செல்லும், யார் தண்டனைக்குள்ளாகப்போகின்றார்கள் என்பது தொடர்பில் தற்போதைக்கு எதனையும் கூற முடியாதுள்ளது.

ஆனால், மிலேச்சத்தனமாக கொலை செய்யப்பட்ட பிரியந்தவின் உடன் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மீளத் துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தர் இறுதிக்கிரியைகளை நடத்தவுள்ளனர்.

இந்நிலையில், பிரியந்தவின் மனைவியான, நிரோஷா தசநாயக்க, எனது அப்பாவிக் கணவர் கொலை செய்யப்பட்டமை குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தி, எனக்கும், கணவருக்கும், இரண்டு பிள்ளைகளுக்கும் நியாயத்தை பெற்றுத் தாருங்கள். இலங்கை ஜனாதிபதி, பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் மிகத் தாழ்மையாக கேட்டுக்கொள்கின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், பிரியந்தவின் சகோதரர், ‘எனது சகோரர் கொல்லப்பட்ட காட்சிகள் சமுக வலைத்தளங்களில் பகிர்வதை நிறுத்துங்கள். எனது சகோதரரின் கொலை தொடர்பான காணொளிகள் சமூகவலைத்தளங்களில் பரவி வருவது எனது குடும்பத்திற்கும், குறிப்பாக பிரியந்தவின் மனைவிக்கும், அவரது இரு பிள்ளைகளுக்கும் கடுமையான பாதிப்பையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகின்றது’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறிருக்க, பாகிஸ்தான் அரசாங்கம் விசாரணைகளை தொடர்வதாக அறிவித்துக்கொண்டிருந்தாலும், பிரியந்தவின் விடயத்தின் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

கொலையுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவதோடு, பாதிக்கப்பட்ட பிரியந்தவின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பொறுப்புக்கூற வேண்டியது கட்டாயமாகின்றது.

ஏனென்றால், பாகிஸ்தானின் தற்போதைய இம்ரான் அரசாங்கம் தான் ‘தெஹ்ரிக் இ லெப்பெய்க்’ போன்ற கடும்போக்கு மதவாத அமைப்புக்கள் மீதான தடைகளை நீக்கியிருந்தது. பாகிஸ்தானின் பொலிஸாரே இந்த தடை நீக்கத்தினை எதிர்த்தபோதும் இம்ரான் அரசு அதனை பொருட்டாக கொள்ளவில்லை.

அதன்விளைவு, இம்ரான் அரசாங்கத்தின் மீதான சர்வதேச கௌரவத்தினை முழுமையாக அழித்துள்ளது. வளர்ச்சியுறும் மனித நாகரீகத்தில் இவ்விமான பிற்போக்கு மனோநிலையுள்ளவர்கள் பாகிஸ்தானில் உள்ளார்கள் என்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்துள்ளது. இது, பாகிஸ்தானுக்கு தலைக்குனிவு மட்டுமல்ல, வரலாற்றில் அழியாத வடுவே.

-பெனிற்லஸ்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *