
வவுனியாவில் இருந்து சென்று முல்லைத்தீவு, மணற்குடியிருப்புக் கடலில் நீராடிய மூன்று இளைஞர்கள் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏனையோரைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இந்தச் சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது.
வவுனியாவில் இருந்து சென்ற மூவர் கடலில் இறங்கி நீராட, அவர்களுடன் சென்ற யுவதி ஒருவர் கரையில் இருந்துள்ளார். கடலில் நீராடிய மூவரும் அலையில் அடித்துச் செல்லப்படுவதை அவதானித்த அவர், கரையில் இருந்தவர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
வவுனியா, மதகுவைத்தகுளம் பகுதியைச் சேர்ந்த மனோகரன் தனுஷன் (வயது-27), சிவலிங்கம் சகிலன் (வயது-26), வவுனியா தோணிக்கல்லைச் சேர்ந்த விஜயகுமார் தர்சன் (வயது-26) ஆகியோரே அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்.
கடற்படையினரும், மீனவர்களும் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் முல்லைத்தீவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. ஏனைய இருவரையும் தேடும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.