அமைச்சுக்களின் செயலாளர்களால் புலிகளின் தங்கம் தோண்ட முற்பட்ட இடத்தில் அகழ்வு பணி நிறைவு!

இறுதி யுத்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரண்டு பிரதான அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த தங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட இடமான முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் அகழ்வு நடவடிக்கை கடந்த 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் இந்த அகழ்வு நடவடிக்கைகள் பொலிஸாரால் அன்று மாலை ஆரம்பிக்கப்பட்டது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத்தை நீதிமன்றின் உத்தரவிற்கமைய தோண்டி எடுப்பதற்கு முன்னதாக அமைச்சுக்களின் செயலாளர்கள் இருவர் இரகசியமாக தோண்டி எடுக்க முயற்சித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த சம்பவம் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே இன்று அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இருப்பினும், அன்றையதினம் அண்மைய நாட்களாக பெய்த கனமழை காரணமாக குறித்த பகுதிக்கு கனரக இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாத நிலையில் 3ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கமைய, 3ஆம் திகதி மீண்டும் அகழ்வுப்பணிகள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி .சரவணராஜா முன்னிலையில் ஆரம்பமாகியது.

குறித்த குழிகளுக்குள் வெள்ளநீர் தேங்கி அதனை அகற்ற முடியாத நிலை உருவானதாலும் கனரக இயந்திரம் நிலத்தினில் புதையுண்டதாலும் அகழ்வுப்பணிகள் பாதியில் இடைநிறுத்தப்பட்டதோடு, மீண்டும் குறித்த அகழ்வுப் பணி இன்றைய தினம் இடம்பெற்றது.

இதன்போது குறித்த இடத்தில் தங்க நகைகள் ஏதும் கிடைக்கவில்லை. அங்கு கிடைத்த தகரத்துண்டு உரப்பை கயிறு போன்ற பொருட்களை நீதிமன்றில் பாரப்படுத்துமாறும், அகழ்வுப்பணிக்கு முன்னர் குறித்த இடத்தில் அகழ்வு செய்தவர்கள் தொடர்பில் விசாரித்து அறிக்கையிடுமாறும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்ட முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி, இது தொடர்பான வழக்கு விசாரணைகள் 2022.01.25 அன்று இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.

பிரியந்தவின் குடும்பத்தின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் அரசாங்கம் செயற்படுகின்றது! பீரிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *