நாட்டில் 458 எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவு: கசிவுகளை கண்டறிய வழிமுறைகளுடன் ஆய்வு குழு அறிக்கை!

உள்நாட்டு எரிவாயு வெடிப்புகளை ஆய்வு செய்த நிபுணர்கள் குழு, எந்தவொரு கசிவையும் நுகர்வோர் கண்டறிய, ஒரு தனித்துவமான வாசனையுடன் கூடிய இரசாயன திரவமான எத்தில் மெர்காப்டானைச் சேர்க்குமாறு விநியோக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகக் கூறியுள்ளது.

அதன் தலைவர் சாந்த வல்போலகே கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் 28ஆம் திகதி வரை 458 வாயு தொடர்பான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றில் 244 முறைப்பாடுகள் கசிவுகள் தொடர்பான முறைப்பாடுகள் எனவும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.

கசிவுகளை மக்கள் அடையாளம் காண துர்நாற்றத்துடன் கூடிய இரசாயனப் பொருள் இல்லாதது கவலைக்குரிய ஒரு முக்கிய விடயமென குழு அடையாளம் கண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

காலாவதியான மற்றும் தாழ்வான ரெகுலேட்டர்கள், ஹோஸ்கள் மற்றும் ஹோஸ் கிளிப்புகள் பயன்படுத்துவது கவலைக்குரிய மற்றொரு விடயம் என்றும் இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அக்குழு தெரிவித்துள்ளது.

இதுபோன்ற உள்நாட்டு விபத்துகளுக்கு வழிவகுக்கும் வீட்டு எரிவாயு கலவை மாற்றப்பட்டதா என்பதை இன்னும் ஆய்வு செய்து வருவதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது.

எனவே, எரிவாயு நிரப்பப்பட்ட மற்றும் சிறப்பு முத்திரை கொண்ட சிலிண்டர்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  அந்தக் குழு கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *