கப்பம் கோரி கைதாகிய போலி சி.ஐ.டிக்கு விளக்கமறியல்!

திருட்டு விசாரணை ஒன்றினை சமாளிப்பதற்கு கப்பம் கோரி கைதாகிய  போலி சி.ஐ.டி ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கல்லடி உப்போடை புறநகர் பகுதி ஒன்றில் அண்மையில் நகை திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.இதன் பிரகாரம் குறித்த திருட்டு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை அடையாளம் கண்ட காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இது குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக குறித்த சந்தேக நபரின் வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளனர்.

பின்னர் சந்தேக நபர் வீட்டில் இல்லாமையினால் மீண்டும் வருவதாக கூறி அவ்விடத்தில் இருந்து சென்றுள்ள நிலையில் அதே வீட்டிற்கு சில நிமிடத்திற்கு மற்றுமொரு   போலி சி.ஐ.டி என கூறப்படும் நபர் ஒருவர் சென்றுள்ளதுடன்  ரூபா 10 ஆயிரம் கப்பமாக  தந்தால் குறித்த பிரச்சினையை தீர்த்து தருவதாக சந்தேக நபரின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

கப்பம் கோரிய போலி சி.ஐ.டி தொடர்பாக தொடர்பில் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய அன்று  இரவு  காத்தான்குடி  பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா  தலைமையில் சென்ற பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் வைத்திருந்த அடையாள அட்டையில் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் கல்விப்பணிப்பாளர் என பதவி  குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி  பொலிஸார் முன்னெடுத்திருந்த நிலையில் திங்கட்கிழமை(6) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபரை ஆஜர்படுத்தியதை தொடர்ந்து எதிர்வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *