பிரியந்த குமாரவின் படுகொலையானது இரு நாடுகளின் சுமுக உறவுகளில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என பாகிஸ்தானுக்கான இலங்கைத் தூதுவர் மொஹான் விஜய் விக்கிரம உறுதியளித்தார்.
பாகிஸ்தானும் இலங்கையும் நட்புறவு கொண்ட நாடுகளாகவே இருக்கும். இந்தச் சம்பவம் எமது உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என நான் உறுதியளிக்கிறேன் என குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என குறிப்பிட்ட அவர், பாகிஸ்தான் அரசின் ஆதரவைப் பாராட்டியதோடு பாகிஸ்தான் மக்களின் அனுதாபங்களுக்கும் இரங்கலுக்கும் நன்றி தெரிவித்தார்.
பிரியந்தவின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகின்றேன். பாகிஸ்தான் உடனடி நடவடிக்கை எடுத்திருப்பதை நாங்கள் பார்த்தோம்.
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் சமூக, பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகள் உள்ளன. மேலும், இந்தச் சம்பவம் தற்போதுள்ள உறவை பாதிக்காது என அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, பாகிஸ்தானின் பி.டி.ஐ. கட்சியின் தலைவர் அர்ஷாத் தாட், இலங்கைத் தூதுவரிடம் இவ்வாறான சம்பவத்தில் மதம் பயன்படுத்தப்பட்டது வருத்தமளிப்பதாகக் கூறியதோடு, கட்சி சார்பில் மன்னிப்பும் கோரியுள்ளார்.