காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம் செய்தவர்களை கஞ்சா கடத்தியதாக கைது செய்த கடற்படை; உறவினர்கள் போராட்டம்

கஞ்சா கடத்தியதாக குற்றச்சாட்டை முன்வைத்து இருவரை கைது செய்த கடற்படையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாதகலில் கவனயீர்ப்பு போராட்டமொன்று உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாதகல் பகுதியைச் சேர்ந்த இருவரை, கஞ்சா கடத்திய சந்தேகத்தில் கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களது உறவினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை மாதகல் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த இருவரும் நேற்று கடலுக்கு சென்று திரும்பி வரும் வேளையில் கடற்படையினர் அவர்களை வழிமறித்தனர்.

இதன்போது கடற்படையினரின் கட்டளைக்கு கட்டுப்பட்டவர்கள் அவ்விடத்தில் நின்ற நிலையில், கடலில் மிதந்து வந்த, சுமார் 276 கிலோ கஞ்சாவை அவர்கள் கடத்தியதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் பயணித்த படகு சிறியது. அந்தப்படகில் தொழில் முதல்கள் இருந்தன. இந்நிலையில் 276 கிலோ கஞ்சா அவ்வாறு அந்த படகில் கொண்டு வருவது?

அத்துடன் அவர்கள் பயணித்த படகின் ஜி.பி.எஸ்ஸினை பார்த்தால் அவர்கள் எங்கு சென்றுள்ளார்கள் கஞ்சா கடத்தும் இடத்துக்கு சென்று உள்ளார்களா என தெரியவரும்.

அத்துடன், கைது செய்யப்பட்டவர்களை “நீங்கள் காணி சுவீகரிப்பு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தானே” எனக் கேட்ட கடற்படையினர், ஈவிரக்கமற்ற முறையில் தாக்கியுள்ளனர்.

இதனை, உறவினர்கள் பார்க்கச் சென்ற போது அவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நேற்று இரவு இளவாலைப் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்கள்.

எனவே கைது செய்யப்பட்டவர்களை சரியாக விசாரணை செய்து உண்மைத் தகவலை வெளிப்படுத்த வேண்டும் – என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *