வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள மின் உற்பத்தி திட்டத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்கும் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், வடக்கின் இந்த மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் எவ்வித தீர்மானத்தை எடுக்கவில்லை.
இதனிடையே, வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகளில் சூரிய மற்றும் காற்றலை மின் உற்பத்தித் திட்டங்களை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கும் தயார் நிலைகள் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்திருந்தார்.
தனது கட்சியின் அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை அவர் கூறியிருந்ததுடன் இந்த விடயம் குறித்து மின்சார சபையின் தலைவர், நிதியமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அண்மையில் சீனா கைவிட்ட மூன்று மின் உற்பத்தி திட்டங்களே இந்தியாவுக்கு வழங்கப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த வாரம் டுவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த இலங்கைக்கான சீனத் தூதரகம், மூன்றாம் தரப்பு முன்வைத்திருந்த பாதுகாப்பு தொடர்பான சிக்கல் காரணமாக, வடக்கில் மூன்று தீவுகளில் நிர்மாணிக்கப்படவிருந்த, கலப்பு மின் உற்பத்தித் திட்டத்தை சீனாவின் சினோ சோர் ஹைபிரிட் டெக்னோலஜி நிறுவனம் கைவிட்டுள்ளதாக கூறியிருந்தது.
இதனையடுத்து, மாலைதீவுகளில் 12 தீவுகளில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது என்றார்.