எரிவாயுவின் தரம் சம்பந்தமாக தற்போதைய அரசாங்கமும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் கடந்த காலத்தில் தமது பொறுப்புகளை நிறைவேற்றவில்லை என்பதை ஏற்றுக்கொள்வதாக நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எரிவாயு மற்றும் அதனை பயன்படுத்தும் உதிரிபாகங்களின் தரம் சம்பந்தமாக 1960ஆம் ஆண்டுகளில் இருந்தே எவ்வித கண்காணிப்பு நடைபெறவில்லை.
இதற்கு முன்னர் எரிவாயு சம்பந்தமாக ஏற்பட்ட விபத்துகள் தொடர்பாக கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் தேடிப்பார்த்து நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போது இப்படியான நிலைமை ஏற்பட்டிருப்பதை தவிர்த்திருக்க முடியும்.
இரண்டு நிறுவனங்களின் சமையல் எரிவாயுவை பயன்படுத்தும் நுகர்வோரின் பாதுகாப்பு சம்பந்தமான எவ்வித கவனம் செலுத்தப்படவில்லை என்பது எனது தனிப்பட்ட நிலைப்பாடு. இந்த நிறுவனங்கள் தமது பொறுப்புகளில் இருந்து தப்பிக்க முடியாது.
தற்போது நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில் கண்டறியப்படும் தகவல்களுக்கு அமைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக கூடிய பச்சமாக சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது உரிய தரத்துடன் கூடிய சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்தும் பழைய எரிவாயு கொள்கலன்களை பயன்படுத்துவோர் பாதுகாப்புடன் செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் நசீருக்கும் இடையில் சந்திப்பு!