காலத்தை வென்ற மக்கள் நேய வரவு செலவுத் திட்டம் கடற்றொழில் துறைக்கும் தைரியத்தை தந்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும், சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் கடற்றொழில் சார்ந்து முன்வைக்கப்பட்டிருந்த 16 இலக்குகளை செயற்படுத்துவதற்கு ஏதுவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்ட சட்டவிரோத கடற்றொழிலை முழுமையாகத் தடை செய்வதற்காக கடல் ரோந்து நடவடிக்கைகளை கரையோரப் பாதுகாப்புப் படையினருடன் இணைந்த ஒரு கூட்டு ஏற்பாடாக மேற்கொள்தல், கடல் வளத்தைப் பேண பாதுகாப்பு பிரிவினர் மற்றும் உயரதிகாரிகளை நியமித்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளோம்.
கண்டல் தாவரங்களின் அழிவைக் கட்டுப்படுத்துவதற்கும் அவற்றை நடுகை மற்றும் மீள் நடுகை செய்வதற்கும் அதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளை பணிகளில் அமர்த்துவதற்கும் உத்தேசித்துள்ளேன்.
இதேவேளை, தொழில் பாதிப்பு காலங்களில் கடற்றொழிலாளர்களுக்கென நியாயமான ஒரு தொகை கொடுப்பனவை வழங்கக்கூடிய காப்புறுதித் திட்டமொன்றை ஏற்படுத்துவதற்கும் ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.