வவுனியா – மயிலங்குளம் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி கிராம சேவையாளர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .
குறித்த விபத்து, இன்று (08) புதன்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
விபத்துக்கு உள்ளான கிராம சேவகர், பண்டாரிக்குளம் தனது வீட்டில் இருந்து ஆசிகுளம் கிராம சேவகர் பிரிவிற்கு இன்று காலை கடமைக்கு சென்றுள்ளார்.
இதன் போது மயிலங்குளம் சந்திக்கு அண்மித்த பகுதியில் உள் ஒழுங்கையிலிருந்து எதுவித சமிக்ஞைகளுமின்றி பிரதான வீதிக்கு கிரவல் ஏற்றி கொண்டு வந்த டிப்பர் வாகனம் கட்டுப்பாட்டையிழந்து கிராம சேவகர் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி தள்ளியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த ஆசிகுளம் கிராம சேவகரான பாலசுப்பிரமணியம் ஜனகன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.