முல்லைத்தீவு மாவட்டமெங்கும் கட்டாக்காலி கால்நடைகள் அதிகரித்துள்ளதாகவும் இதனால் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் மக்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கட்டாக்காலி கால்நடைகள் 75 பிரதேச சபையினால் பிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரியவருகையில்,
கட்டாக்காலி கால் நடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் பிரதேச சபை ஊழியர்கள் தாக்கப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும் தொடர்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்களும் குறித்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதேச சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் 06-ம் திகதி அன்று வீதிகளில் கட்டாக்காலிகளாக நின்ற 75 கால்நடைகளை புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் பிடித்து பிரதேச சபையில் கட்டிவைத்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வீதிகளில் நிக்கும் கட்டாக்காலி கால்நடைகளால் விபத்துக்கள் இடம்பெற்று வருவதுடன் விவசாய செய்கைக்கும் கால்நடைகள் பாதிப்பினை ஏற்படுத்தி வந்துள்ளன.
இதையடுத்து, வீதிகளில் உள்ள கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துமாறு பலதடவைகள் மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில் 06ம் திகதி 75 மாடுகளை பிரதேச சபையினர் பிடித்துள்ளார்கள்.
இவ்வாறு பிடிக்கப்பட்ட மாடுகளுக்கு கால்நடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து தண்டம்அறவிடப்படும் என்றும் பிரதேச சபையினர் தெரிவித்துள்ளார்கள்.
அதன்படி பெரிய மாடு ஒன்றுக்கு இரண்டாயிரம் ரூபாவும்,சின்ன மாடு ஒன்றிற்கு ஆயிரம் ரூபாவும் ஒரு நாள் பராமரிப்பு இருநூறு ரூபாவும் என அறிவித்துள்ளதுடன், கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் கால்நடைகளை கட்டி வளர்க்குமாறும் பிரதேச சபையினர் அறிவித்துள்ளார்கள்.
இதேவேளை முள்ளியவளை பிரதேச சபையின் சுகாதார ஊழியர்கள் சுகாதார பணிசெய்து கொண்டிருந்த போது நான்கு பேர் கொண்ட குழு தாக்குதல் நடத்தியுள்ளது
03.12.21 அன்று முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலய முன்பக்க வீதியினை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் முள்ளிவளை பிரதேச சபையின் உப அலுவலக சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டிருந்த வேளை இரண்டு உந்துருளியில் நான்கு பேர் கொண்ட கும்பல் நீங்கள் தானே மாடு பிடிக்கிறீர்கள் என தெரிவித்து பிரதேச சபை ஊழியர்களின் காட்டுக்கத்தியினை பறித்து எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்து,நீதிமன்ற நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளதுடன் ஏனைய இரண்டு பேரையும் கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிசாருக்கு பணித்துள்ளார்.
இவ்வாறான சவால்களுக்கு மத்தியில் தாம் மேற்கொள்ளும் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு பண்ணையாளர்களும் பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு பிரதேச சபை தவிசாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.