அநுராதபுரம் சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவால் லொஹான் ரத்வத்த குற்றவாளியாக கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என எதிர்கட்சி உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்த நிலையில், யாருக்கும் கிடைக்காத அந்தக் குழுவின் அறிக்கை இவருக்கு மாத்திரம் எப்படி கிடைத்தது என சிஐடி ஊடாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கைத்தொழில், வர்த்தக அமைச்சுகள் மற்றும் நான்கு இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலைகள் அமைச்சு தொடர்பிலும் கருத்து வெளியிட்டு உரையாற்றினார்.
இவரைத் தொடர்ந்து விவாதத்தில் உரையாற்றிய நளின் பண்டார,
லொஹன் ரத்வத்த, இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் இராஜாங்க அமைச்சுக்கு மேலதிகமாக தான் முன்னர் வகித்த சிறைச்சாலைகள் அமைச்சு தொடர்பிலும் கருத்து வெளியிட்டிருந்தார்.
இதனால் இவர் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சராக இன்னும் பதவி வகிக்கின்றாரா என்ற குழுப்பங்கங்கள் காணப்படுகின்றன.
அவருக்கு அந்தப் பதவி எவ்வாறு இல்லாது போனது என்பது தெரியும். அப்போது ஜனாதிபதியால் ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய ஆணைக் குழுவொன்றை அமைத்திருந்தார்.
அவர் குற்றவாளியாகியுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தகவல்கள் கூறுகின்றன. இதனால் அந்த அறிக்கையை வழங்குமாறு கேட்கின்றேன் என்றார்.
இதன்போது, ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து எழுந்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, ‘யாருக்கும் அந்த அறிக்கையின் தகவல்கள் கிடைக்கவில்லை. அமைச்சரவைக்கும் கிடைக்கவில்லை. இவ்வாறான நிலைமையில் இவருக்கு மாத்திரம் கிடைத்தது என்று விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பில் சிஐடிக்கு கூறி தேடிப்பார்க்க வேண்டும்’ என்றார்.
இதனைத்தொடர்ந்து மீண்டும் கருத்து வெளியிட்ட நளின் பண்டார,
‘நீங்கள் அந்த அறிக்கையை சமர்பித்தால் அதில் என்ன இருக்கின்றது என்று கூறலாம். இரவில் சிறைச்சாலைக்கு சென்று தூக்கு மேடையை பார்க்கப்போன சம்பவம் சரியா? பிழையா? என நாட்டுக்கு தெரிந்துகொள்ள முடியும்’ என்றார்.
வெளிநாடு செல்லும் இலங்கையருக்கு தடுப்பூசி பெறுவது கட்டாயமானதல்ல! சுகாதார மேம்பாட்டு பணியகம்