என்ன ஒரு அற்புத தேசம்! என்ன ஒரு அற்புத ஆட்சி! கரன்னாகொடவுக்கு ஆளுநர் பதவியா மனோ எம்.பி ஆதங்கம்!

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட வடமேல்மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என வெளியான செய்திகள் குறித்த தனது கரிசனையை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அவர் அதில் தெரிவித்துள்ளதாவது,

என்ன ஒரு அற்புத தேசம்! என்ன ஒரு அற்புத ஆட்சி!

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட மீது இறுதி யுத்தம் நடந்த 2008, 2009 காலத்தில் கொழும்பில் வசதி படைத்த தமிழ் குடும்ப இளைஞர்கள் 11 பேரை கப்பம் பெறுவதற்காக வெள்ளை வேன் மூலம் கடத்தி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு வழக்கு நடந்தது.

2008, 2009 வேளையில் எனது தலைமையிலான ‘மக்கள் கண்காணிப்பு குழு’ இந்த கொடுமையை பதிவு செய்து உலகிற்கு அறிவித்தது.

இதற்காக எனக்கும் அச்சறுத்தல் பரிசாக கிடைத்தது. ‘வந்து சுட்டு விட்டு போங்கடா’ என நான் சொன்னேன்.

கடத்தப்பட்ட இளைஞர்களின் உடல்கள் கூட கிடைக்கவில்லை. காணாமல்போன பிள்ளைகளின் தாய்மார்கள் அழுத அழுகை இன்னமும் என் நெஞ்சில் ஒலிக்கிறது. அன்றைய போராட்டங்கள் மனதில் நிழலாடுகின்றன.

கொழும்பு எம்பியாக மக்கள் கண்காணிப்பு குழு அழைப்பாளராக – நான் மற்றும் ரவிராஜ் சிறிதுங்க விக்கிரமபாகு பிரியாணி ஆகியோர் அச்சறுத்தல்களுக்கு மத்தியில் பலரை காப்பாற்றினோம்.

பல கடத்தல்களை தடுத்து நிறுத்தினோம். எம்மையும் மீறி பல நடந்தன. வெள்ளை வான் கடத்தல்கள் அரசியல் காரணங்களுக்காக ஆரம்பித்து இது போன்ற கப்பம் பெறவேண்டி நிகழ்ந்தன.

2019ஆம் ஆண்டு சட்டபூர்வமாக வசந்த கரன்னாகொட மீது சாட்டப்பட்ட இந்த குற்றச்சாட்டு மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.

இன்று இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின் கடந்த மாதம் அவர் மீதான குற்றச்சாட்டுகளையும் வழக்கையும் சட்டமா அதிபர் வாபஸ் பெற்றார். கரன்னாகொட சுதந்திர மனிதனாக வெளியே வந்தார்.

இன்று அவரது ‘சாதனையை’ பாராட்டி முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனாகொட, வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கரன்னாகொடவிற்கு ஆளுநர் பதவி: சுமந்திரன் எம்.பி கண்டனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *