ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் பெண்கள் அமைப்பினால் கவன ஈர்ப்பு பேரணி!

சிறுபான்மையினருக்கெதிராக பிரயோகிக்கப்படும் ஆயுதமாகவுள்ள இந்த பயங்கரவாத தடைச்சட்டம் கட்டாயமாக நீக்கப்படுவதுடன் இச்சட்டம் பாவிக்கப்படுதல் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் போன்ற ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் பெண்கள் அமைப்பினால் கவன ஈர்ப்பு பேரணியொன்று இன்று  (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண பெண்கள் ஒன்றிணைக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த பேரணியை மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டது.

கல்லடி பாலத்திலிருந்து அமைதியான முறையில் பறை மேளம் முழங்கள் குறித்த பேரணியானது மட்டக்களப்பு பிரதான  பேருந்து நிலையம் வரையில் வருகைதந்ததுடன் அங்கு தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் அரசாங்கத்திற்கான மகஜர் வாசிக்கப்பட்டது.

பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயல்வாத வாரம் கடந்த நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் டிசெம்பர் 10ஆம் திகதி வரையில் அனுஸ்டிக்கப்பட்டுவரும் அதனை முன்னிட்டு இந்த பேரணி நடாத்தப்பட்டது.

இந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள் ‘வன்முறைகளற்ற வீடும்,நாடும் எமக்கு வேண்டும்,பெண்களுக்கு பாரபட்சமான சட்டத்தினை திருத்தவேண்டும்,நீதிகோரும் சகோதரிகளாக நாம் ஒன்றிணைவோம்,வன்முறைகளற்ற ஒரு கௌரவமான சமூகத்தினை உருவாக்க ஒன்றிணைவோம்,பசியும் வன்முறைகளுமின்றி தன்னிறைவாக வாழ்வோம்’ போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் பேரணியில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

தமிழ்-முஸ்லிம் சமூகத்தினை சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் சுகாதார நடைமுறைகளைப்பேணியவாறு இந்த பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது இந்த வருடம் பெரும் தொற்றும் பொருளாதார பின்னடைவுகளும் தற்கால நெருக்கடியான சமூக மற்றும் அரசியல் சூழல் காரணமாக பெண்கள், சிறுமிகள் உட்பட அனைவரும் பாரியளவில் சிரமப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான வன்முறைகள் நாட்டின் பாரிய பிரச்சனையாகவுள்ளதுடன் இவ் வன்முறைகள் தொற்றுநோய்ச் சூழலினால்; மறைக்கப்படுகின்றன. இலங்கையில் ஐந்துக்கு ஒரு பெண் என்ற வகையில் தினமும் உடல் ரீதியான, பாலியல் வன்முறைகளுக்குள்ளாகின்றனர் என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் கூறியுள்ளது. இத்துடன் தற்போது பெண்களுக்கு பாரபட்சமாகவுள்ள சட்டங்களான பொதுத்திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டம் மற்றும் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் ஆகியன உடனடியாக திருத்தப்பட வேண்டும்.

பசி என்பது எங்கள் அனைவரிடமும் காணப்படும் ஒன்று. நாம் ஒரு வேளையாவது உண்டு பிழைத்துக்கொண்டு வருகின்றோம். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பது எமக்கு மறைமுகமாக ஏற்படுத்தப்பட்ட வன்முறையேயாகும். பசியும் வன்முறையே! பசி என்பது எமது உடல் ஆரோக்கியத்திற்கும் மனதுக்கும் ஏற்படுத்தப்படும் வன்முறையேயாகும். பசி என்பது உணவு பற்றாக்குறையால் அல்ல! இது ஒரு அரசியல் ரீதியான அடக்குமுறையாகும். மிக நலிவடைந்த ஏழை மக்களுக்கு உதவுவதற்கு எவ்விதமான அரசியல் விருப்பங்களும் இல்லாததால் நாம் பட்டினியில் இருக்கிறோம்.

இது மட்டுமல்லாது இந்த வருடம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் (நாங்கள்); எமது பிரதேசங்களில் இருக்கும் பலர் கைது செய்யப்பட்டும், தடுத்து வைக்கப்பட்டு நீதியான விசாரணைகளின்றி சிறைகளில் வாடுகின்றார்கள். இதனால் நாங்கள் தொடந்தும் பல சிரமங்களுக்குள்ளாகிக் கொண்டுள்ளோம்.

அத்துடன் தகுந்த நடவடிக்கைகள் இல்லாமை மற்றும் முடிவில்லா தாமதங்களால் இச் சட்டத்தின் கீழ் எமது அன்புக்குரியவர்கள் (கைது) தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் பெண்களாகிய நாங்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளோம்.

சிறுபான்மையினருக்கெதிராக பிரயோகிக்கப்படும் ஆயுதமாகவுள்ள இந்த பயங்கரவாத தடைச்சட்டம் கட்டாயமாக நீக்கப்படுவதுடன் இச்சட்டம் பாவிக்கப்படுதல் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

இவை அனைத்தையும் அடையாளப்படுத்துவதற்கான அரசியல் விருப்பம் எங்கே? வன்முறைகளுக்கான பதிலிறுப்பாக அத்தியாவசிய சேவைகள் எங்கே? என நாம் அரசிடமும் அரசியல்வாதிகளிடமும் கேள்வியெழுப்புகின்றோம்.

பெண்கள் மீதான வன்முறைகளுக்கெதிரான சேவைகள் அனைத்தும் அத்தியாவசிய சேவைகளாக்கப் பிரகடனப்படுத்தப்பட வேண்டும், உணவுப்பொருட்களின் விலையினை கட்டுப்படுத்துவதுடன் உணவு வினியோகத்தினையும்  இலகுபடுத்துவதற்கு  அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், பசி பட்டினியில் இருந்து மக்களை விடுவிக்க சமூகப்பாதுகாப்பு செயற்றிட்டங்களை அரசு உடனடியான அமுல்படுத்த வேண்டும்.

,அரசியல்மயப்படுத்தப்படாத, உள்ளுர்  வளப் பொருளாதார முறைமையை பிரதானமாக்கும் நடைமுறைக் கொள்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்,பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பாவித்து கைது செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *