முறிகண்டியில் நான்கு குழந்தைகளுடன் தவிக்கும் குடும்பம் ; தமக்கு உதவுமாறு கோரிக்கை

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திருமுறிகண்டி மாதிரிக் கிராமத்தில், நான்கு குழந்தைகளுடன் துரைச்சாமி தியாளன் என்பவரின் குடும்பம் வாழ வழியின்றி தவித்து வருகிறது.

இந்த நிலையில், தமது குடும்பத்தை மேற்கொண்டு நடத்துவதற்கும், பிள்ளைகளின் மருத்துவம் மற்றும் படிப்பு செலவிற்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தெரியவருகையில்,

நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த துரைச்சாமி தியாளன் கிளிநொச்சியில் தொழில் புரிந்து வந்துள்ளார்.

கடந்த 2018 ம் ஆண்டு தனது மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளுடன் குடும்பமாக கிளிநொச்சியில் வசிக்க வந்துள்ளார்

கிளிநொச்சி விவேகானந்த நகர் பகுதியில் சுமார் ஒருவருடம் வசித்து வந்த நிலையில், குறித்த குடும்பம் வசித்த காணியில் எழுந்த சிக்கல் நிலை காரணமாக, கண்டாவளை பிரதேச செயலாளார் பிரிவின் முரசுமோட்டை கிராம அலுவலர் பிரிவில் அதற்குப்பின் வசித்து வந்துள்ளனர்.

அங்கும் இவர் வசித்த வீட்டில் உரிமையாளர்கள் வந்த நிலையில், 8 ம் மாதம் முதல் கண்டாவளை பகுதியில் இருந்த பதிவுகளை நீக்கி ஒட்டுசுட்டான் – திருமுறிகண்டி மாதிரிக் கிராமத்தில் பிறிதொரு நபருடைய வீட்டில் தற்காலிகமாக குடியிருந்து வருகின்றனர்.

இவ்வாறு, குறித்த பகுதியில் தமது குடும்ப பதிவை மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில் திண்டாடுவதாக குறிப்பிட்டார்.

அத்துடன், பலர் வீடுகளை கட்டி அந்த வீட்டில் வசிக்காத நிலையில், வாழ வழியின்றி தவிக்கும் எமக்கு ஒரு இடம் தந்து வாழ வழிசெய்ய மறுப்பதாகவும் கவலை வெளியிட்டார்.

குறித்த பகுதியில் தமக்குரிய பதிவை மேற்கொள்ளாமையினால் பிள்ளைகளை கூட பாடசாலைக்கு அனுப்ப முடியவில்லை.

தன்னுடைய இறுதி மகள் நோய்வாய்ப்பட்டுள்ள காரணத்தினால் மனைவி மகளை வைத்தியசாலை கொண்டு சென்று வைத்திருக்கும் நேரங்களில், தனது மூன்று சிறு பிள்ளைகளையும் விறகு வெட்ட அழைத்து செல்வதாக தெரிவித்தார்.

இவ்வாறு விறகு வெட்டி விற்பனை செய்து தனது குடும்ப வாழ்வை மேற்கொண்டு நடத்துவதற்காக பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளார் துரைச்சாமி தியாளன்.

மேலும், பாடசாலை செல்ல ஆர்வமுடைய தனது பிள்ளைகளை சேர்க்க பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுப்பதாகவும், நாளாந்த உணவுக்கும் தனது இறுதி மகளின் மருத்துவ செலவுக்கும் திண்டாடி வருவதாகவும் தெரிவித்தார்.

தனக்கு காணி வீட்டினை பெற்றுத்தர அரச அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும், தனது வாழ்வாதாரத்துக்கு தனது பிள்ளையின் மருத்துவ செலவுகளுக்கும் உதவும் உள்ளம் படைத்தவர்கள் தனக்கு உதவுமாறும் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *