வரணியில் கொடிகாமம் பொலிசாரின் ஏற்பாட்டில் சிவில் பாதுகாப்புக் குழு கூட்டம்…!

யாழ்.தென்மராட்சி வரணிப் பகுதியில் கொடிகாமம் பொலிஸாருக்கும் – சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களுக்கும், மக்களுக்கும் இடையில் ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வு பிற்பகல் 3 மணியளவில் வரணி மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிரிசிங்க, சிவில் பாதுகாப்பு குழு பொலிஸ் உத்தியோகத்தர் M.B.G உபசேன, மக்கள் தொடர்பாடல் பொலிஸ் உத்தியோகத்தர் கிருஸ்ணராஜ் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில், கொடிகாமம்,சாவகச்சேரி,கோப்பாய் பொலிஸ் நிலையங்களுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் கீர்த்திசிங்க கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.

அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஒவ்வொரு கிராமத்திற்கும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் மக்கள் தொடர்பினைப் பேணி கிராமத்தில் நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் தெரிவித்தார்.

அத்துடன் கிராமங்களில் போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கான அவசியத்தையும் குறிப்பிட்ட பிரதிப்பொலிஸ் அத்தியட்சகர் பிள்ளைகளின் செயற்பாடு தொடர்பில் பெற்றோர்கள் மிகுந்த கவனம் எடுப்பது தொடர்பாகவும் விளக்கினார்.

மேலும் தொலைபேசி பாவனை மூலம் பிள்ளைகள் தவறான வழிக்கு செல்வதை தடுப்பதற்கு பெற்றோர்கள் விழிப்புடனும் கவனத்துடனும் இருக்குமாறும் குறிப்பிட்டார்

தொடர்ந்து கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கருத்துத் தெரிவிக்கையில்,

சிவில் பாதுகாப்புக் குழு அமைப்பதன் காரணத்தையும் அதன் அவசியத்தையும் மக்களுக்கு எடுத்துரைத்தார்.

இவற்றை மொழி பெயர்த்த மக்கள் தொடர்பாடல் பொலிஸ் உத்தியோகத்தர் கிருஸ்ணராஜ் சிவில் பாதுகாப்பு குழு தொடர்பான அவசியமான விடயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் வரணி வட்டார பிரதேசசபை உறுப்பினர் சி.பிரபாகரன் மற்றும் கிராம சேவகர்கள்,சிவில் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *