பிபின் ராவத்தின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இராணுவத் தனபதி டெல்லிக்கு பயணம்!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் இராணுவ இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா இந்தியாவிற்குச் சென்றுள்ளார்.

அதன்படி, அவர் தனது மனைவி மற்றும் இராணுவ அதிகாரிகள் உட்பட 11 பேருடன் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை புதுடெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

ஜெனரல் சவேந்திர சில்வா, இந்தியாவில் உள்ள அவரது துணைத்தலைவரின் துக்ககரமான மறைவைக் கேள்விப்பட்டு, ஊடகங்களுக்கும் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கும் வெளியிட்ட விசேட இரங்கல் செய்தியில் ஆழ்ந்த வருத்தத்தையும் அதிர்ச்சியையும் தெரிவித்தார்.

இலங்கை ஆயுதப் படைகளின் உண்மையான நண்பராகவும், இராணுவத் தலைவராகவும் தனது நினைவைப் போற்றும் அவர், அவரது முதிர்ந்த இராணுவ அறிவு, கட்டளை, தலைமைத்துவ பண்புகள், தொலைநோக்குப் பணி மற்றும் இணக்கமான பணி உறவு ஆகியவை ஆற்றல்மிக்க தொழில்முறை மற்றும் புதிய சகாப்தத்தை உருவாக்கியிருக்கும் என தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் காட்டேரியில் நிகழ்ந்த ஹெலிகொப்டர் விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் கடந்த புதன்கிழமை வானில் பறந்துகொண்டிருந்த இராணுவ ஹெலிகொப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *