காணாமலாக்கப்பட்டவர்களுடைய கண்ணீருக்கும், ஏக்கத்திற்கும் உடனடியாக சர்வதேசம் விடை சொல்ல வேண்டும் எனவும், எங்களுடைய மண்ணிலே எங்களை நாங்களே ஆளக்கூடிய ஒரு தீர்வை வென்றெடுக்க வேண்டும் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று இடம்பெற்றது. இப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இவர் கலந்துகொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் சபையால் ஒவ்வொரு ஆண்டும் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.
இலங்கையில், குறிப்பாக வடக்கு, கிழக்கு தாயகப் பகுதியில் பலர் கடத்தப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்ட பிரச்சினைகள் 25 ஆண்டுகளாக ஆரம்பித்தது, 2009 ஆம் ஆண்டிலே மிக விஸ்வரூபம் எடுத்தது.
இதுவரை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு 20,000 மேற்பட்ட தமிழ் உறவுகள் காணாமலாக்கச் செய்யப்பட்டதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டன.
ஆகவே, அவர்களைத் தேடித்தான், சர்வதேச நீதி வேண்டும் என்றும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இப் பிரச்சினைகள் தொடர்பில் கொண்டு செல்லப்பட்டது.
சர்வதே ரீதியாக நீதி கிடைக்க வேண்டும் என இந்த மக்கள் வருடக்கணக்காக வீதிகளில் இருந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆகவே, சர்வதேசம் நிச்சயமாக இவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
அவர்களுக்கு என்ன நடந்தது, அவ்வாறு சிலர் கொல்லப்பட்டிருந்தால் கொல்லப்பட்டதற்கான காரணங்கள் என்ன, தண்டனை என்ன, நீதி, நிவாரணம் என்ன என்ற கேள்விகள் எழுகின்றது.
அவர்களுக்கான நீதி கிடைக்கப்பெற்று, நிவாரணங்கள் ஒழுங்கு செய்யப்பட்டு, பொறுக்கூறல் போன்ற நிலைமை ஏற்படுத்தப்பட வேண்டும்.
மேலும், ஈடு செய் நீதியின் அடிப்படையில், சர்வஜய வாக்கெடுப்பை நடத்தி அரசியல் தீர்வைக் காண வேண்டும்.
எங்களுடைய மண்ணிலே எங்களை நாங்களே ஆளக்கூடிய ஒரு தீர்வை வென்றெடுப்பதுதான் இதற்கு சரியான வழியாக இருக்கும்.
காணாமலாக்கப்பட்டவர்களுடைய கண்ணீருக்கும், ஏக்கத்திற்கும் உடனடியாக சர்வதேசம் விடை சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டம் நடைபெறுகின்றது எனத் தெரிவித்தார்.
