சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில், வடகிழக்கு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், எமது உறவுகளைத் தேடும் உரிமைக்காகவே போராட வேண்டிய நிலையிலுள்ள வயோதிபத் தாய்மாராகிய நாங்கள் மிகவும் மன்றாட்டத்துடன் கேட்பது யாதெனில், எமது உறவுகளுடன் வாழத்துடிக்கும் எமக்கான நீதியைவிரைவில் அதாவது நாம் இறப்பதற்கு முன் பெற வழி செய்யுங்கள். அதுவரை எமதுபோராட்டம் தொடரும். அப்படித் தொடரும் போராட்டத்தை முடக்கும் அச்சுறுத்தல்கள்,அதாவது தடையுத்தரவு, உயிர் அச்சுறுத்தல், பயங்கரவாத தடைச்சட்டத்தை எம் மீதுபிரயோகித்தல் ஆகியவற்றிலிருந்து எமக்குப் பாதுகாப்பளியுங்கள் என வடக்கு கிழக்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஐநா மனித உரிமைஆணையாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி, தாம் முன்னெடுக்கும் இந்த நீதிபோராட்டம் தொடரும் வரையில் தமக்குரிய பாதுகாப்பை வழங்குமாறு மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்
குறித்த மகஜரில்,
இலங்கை அரசின் படைகளாலும்,துணை ஆயுதக்குழுக்களாலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடும் எமது தொடர்போராட்டம் இன்று 1750 வது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இன்று சர்வதேச மனித உரிமைகள்தினம். நாம் எமக்கான உரிமைகள் யாவும் மறுக்கப்பட்ட நிலையிலும், எம் உரிமைகளைப்பற்றி பேசுவதே குற்றம் என்ற நிலையிலும், எமது போராட்டத்தை தொடர்வதற்காகவே போராடவேண்டிய சூழ்நிலையிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
1948ம் ஆண்டு ஐ.நா பொதுச்சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட இத்தினமானது பல்வேறுபட்ட உரிமைகளை மனித உரிமைகளாக வரையறுத்துக்கூறியிருந்தாலும், அவற்றுள் ஒரு மனிதன் வாழ்வதற்கான உரிமையும், சுயகௌரவத்துடனும்,பாரபட்சமின்றி நடத்தப்பட வேண்டும் என்பதையும் முக்கியமானதாகக் கொள்ளலாம்.
இலங்கையிலே தமிழர்கள் மேற்கூறப்பட்ட இரண்டு உரிமைகளும் அற்றவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.பிச்சையாக எதைப் போட்டாலும் பெரிய மனசுடன் ஏற்றுக் கொள்ளும் சுயமரியாதை அற்றகுணமும், கூப்பிட்டால் அற்ப சலுகைகளுக்காக காலடியில் விழக்கூடிய குணமும் கொண்டதமிழர்களால் மட்டுமே பயமின்றி உயிர் வாழ முடியும்.
எங்கள் உறவுகள் சுய கௌரவத்துடன் வாழும் உரிமைக்கு ஆசைப்பட்டகுற்றத்திற்காக, வஞ்சகமாகச் சரணடையச் செய்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள். சம உரிமையுடன் நடாத்தப்படவேண்டும் என்று ஆசைப்பட்டதற்காகக் கடத்திச் செல்லப்பட்டு வலிந்து காணாமல் ஆககப்பட்டார்கள் பெற்றோர் சரணடையும் போதுகூட்டிச் சென்ற ஒன்றுமறியாத 20 இற்கு மேற்பட்ட பச்சிளம் பாலகர்கள் அவர்கள் யாருக்கு என்னசெய்தார்கள்? இவர்களின் இனிமையான மழலை கனவுகள் மறுக்கப்பட்டு அவர்களையும் வலிந்துகாணாமல் ஆக்கியமையை மனித உரிமை மீறல் என்ற சொற்களில் மட்டும் அடக்கி விட முடியுமா? இவர்கள் அனைவருக்கும் வாழும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
அந்த உறவுகளைத் தேடியலையும் எங்களுக்கு எங்கள் கணவனுடனும் பெற்ற பிள்ளைகளுடனும் வாழும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.மேற்படி உரிமைகளுக்காகப் போராடிய எங்களில் 108 பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நிலையறியாமலே மரணித்து விட்டார்கள்.
மீதமிருக்கும் நாம் எங்களின் உறவுகளின் நிலையைஅறியப் போராடுவதோடு இறந்தவர்களின் குழந்தைகளிற்காகவும் சேர்த்துப் போராடுகின்றோம்.அதுமட்டுமல்ல இந்தத் தொடர் போராட்டத்தை தொடர்வதற்கே நாம் பலமாகப் போராடவேண்டியுள்ளது.
அரச புலனாய்வாளர்களதும், படையினரதும் அச்சுறுத்தல், அரச அடிவருடிகள் எம்மை திசை திருப்பும், பீதியடையச் செய்யும், குழப்பும் செயற்பாடுகள், என்று பலஎதிர்ப்புசக்திகளுக்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது.
எமது உறவுகளை திருப்பித் தருவதாகக்கூறி, கையளிக்கச் செய்து, சரணடையச் செய்து, வலிந்து காணாமல் ஆக்கிய இந்தஅரசானது நாங்கள் நீதிக்காகப் போராடும் போது“புலிகள் மீளுருவாக்கம்,நாட்டில் அமைதியின்மை ஏற்படுத்தல், சுகாதாரக் கட்டுப்பாடுகள்’’ என்று நாளுக்கொரு காரணம் கூறிஅப்பாவிகளான எங்களுக்கு நீதிமன்றத் தடையுத்தரவுகளை வழங்கி எமது போராட்டத்தைமுடக்கப்பார்க்கின்றது.
இன்னும் எம்மை கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவிற்குவிசாரணைக்கு அழைப்பதன் மூலம் பயமடையச் செய்து எம்மை போராட்டத்தில் இருந்துஅப்புறப்படுத்த முயல்கின்றது. எமது அடிப்படையுரிமைகள்அனைத்தையும் மறுத்து அடக்கி ஒடுக்க நினைக்கும் ஒரு அரசு, எமது காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை தான் கொடுப்பதாக சர்வதேசத்திற்குத் தெரிவிக்கின்றது.
ஆனால் இலங்கையில் நடப்பது என்னவென்று சர்வதேசம் அறியுமா? ஒரே குற்றத்திற்கு தமிழருக்கு ஒரு தண்டனை. சிங்களவருக்குஒரு தண்டனை. விடுதலைப்புலிகளுக்கு உணவளித்தவருக்கு 12 ஆண்டுகள் கழிந்தும் சிறைவாசம்.
சிறுகுழந்தை உள்ளிட்ட எட்டுப் பேரை வெட்டிக் கொலை செய்தவருக்கு மரணதண்டனையிலிருந்து பொதுமன்னிப்பில் உடனடி விடுதலையும் பதவியுயர்யுடன் மீள வேலையும் நாம் வாழும் நாட்டில் மனித உரிமை எந்த நிலையில் உள்ளது என்பதை விளக்க இது போன்ற எவ்வளவோ உதாரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.