காணாமலாக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் பலர் மரணித்துள்ளதால் சாட்சிகளும் மறைக்கப்பட்டுக் கொண்டே போகிறது!

காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளுக்காக சுமார் 13 வருடங்களுக்கு மேலாக நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்து வந்தாலும் நாங்கள் சிறுபான்மை மக்கள் என்பதால் எவ்வித பதிலும் வழங்காது அரசு கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது என மன்னார் மாவட்ட காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதையச்சந்திரா தெரிவித்தார்.

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று மன்னார் மாவட்ட காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து தரிப்பிட்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், சர்வதேச நாடுகளும் பார்த்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் இன்று வரை மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டே இருக்கின்றது. எல்லோரும் கண்களை மூடிக் கொண்டு இடம்பெற்று வருகின்ற மனித உரிமை மீறல்களை பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் எவ்வித பதிலும் கூறுவதாக இல்லை.

நாங்கள் ஒவ்வொரு வருடமும் சர்வதேச மனித உரிமைகள் தினமாக இருந்தாலும் சரி, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமாக இருந்தாலும் சரி கடந்த 13 வருடங்களாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

நாங்கள் சிறுபான்மை மக்கள் என்பதால் எவ்வித பதிலும் கிடைப்பதில்லை. அரசு கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது.

எங்களுக்கு நீதி ஒன்று வேண்டும். அதற்காகவே வடக்கு கிழக்கில் 8 மாவட்டங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வீதிகளில் இறங்கி சுமார் 1,800 நாட்களாக போராடி வருகின்றனர்.

இதுவரை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள் சுமார் 110 பேர் வரை மரணித்துள்ளனர். ஒவ்வொரு மரணங்களும் இதில் மறைந்து கொண்டே செல்கிறது. இதனால் எங்களின் சாட்சிகளும் மறைக்கப்பட்டுக் கொண்டே போகிறது.

அதனையே அரசாங்கம் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது. அதற்கு சர்வதேச நாடுகளும், ஜெனீவாவும் பக்க பலமாக இலங்கை அரசாங்கத்திற்கு துணையாக நின்று செயல்பட்டுக் கொண்டிருபப்பது எங்களுக்கு தெரிகிறது.

கடந்த 5 வருடங்களுக்கு முன், காணாமல் போனவர்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு முதலைக்கு போட்டதாக ஒரு கதை வெளியாகியது.

தற்போது பாகிஸ்தானுக்கு 35 ஆயிரம் கண்கள் தானம் கொடுக்கப்பட்டுள்ளதாக ஒரு கதை வெளியாகி உள்ளது.

ஓ.எம்.பி என்று ஒரு அலுவலகத்தை திறந்து உள்ளார்கள். அந்த அலுவலகத்தால் எவ்வித நன்மையும் இல்லை.

சர்வதேசத்தின் கண் துடைப்பிற்காகவே குறித்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. நாங்கள் யாரிடம் சென்று எதை கூறுவது என்று தெரியவில்லை.

காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக வீதிகளில் இறங்கி கண்ணீர் சிந்தும் தாய்மாரை சற்று நிமிர்ந்து பாருங்கள்.

இறந்தவர்களுக்காக நாங்கள் போராடவில்லை. உயிருடன் ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்காகவே நாங்கள் போராடி வருகிறோம்.

இனி எங்களிடம் தொலைப்பதற்கு எதுவும் இல்லை. எங்களின் துயரம் உங்களுக்கு ஒரு கதையாகவே தெரிகிறது. சர்வதேசமாக இருந்தாலும் சரி ஜெனிவவாக இருந்தாலும் சரி ஒரு தடவை எங்கள் பக்கம் நின்று பாருங்கள். அப்போது தான் நாங்கள் படுகின்ற துயரங்கள் உங்களுக்கு தெரியும்.

அரசு பேருந்துகளில் மக்களை ஏற்றி வந்து முகாம் அமைத்து அங்கே இறக்கப்பட்டனர். அந்த முகாம்களில் இருந்து தெரிவு செய்து இளைஞர்களை ஏற்றி அரச பேரூந்திலேயே அழைத்துச் சென்றனர்.

அந்த இடத்தில் பதிவு ஒன்றை மேற்கொண்ட பின்னரே எமது பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு சென்றிருப்பார்கள்.

அந்த பதிவுகள் எங்கே என்று அரசாங்கத்திடம் கேளுங்கள். நாங்கள் கேட்டால் அரசு இல்லை என்றே கூறுகிறது. எனவே சர்வதேசம் கேட்டு எங்களுக்கு நீதியை பெற்றுத் தாருங்கள் என அவர் கோரிக்கை விடுத்தார்.

அரசாங்கம் காலம் கடத்தி சாட்சியங்களை அழிக்காமல் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்! சிவசக்தி ஆனந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *