பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசாங்கத்திற்கு கைகொடுக்க தயார் – சஜித்

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திற்கு கைகொடுக்க தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர், தனியார் பிரஜைகளினால் வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் வெளிநாட்டு நாணயங்கள் இலங்கை மத்திய வங்கியினால் பலவந்தமாக மாற்றப்படுவதாக தெரிவித்தார். இது தனிப்பட்ட சொத்துக்களை கைப்பற்றும் முயற்சி எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.

இவ்வாறான நடவடிக்கைகளின் இறுதி முடிவுகள் குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர், ஏற்றுமதிகள் வெளிநாடுகளில் அலுவலகங்களைத் திறப்பதுடன், தமது இலாபம் ஈட்டும் முயற்சிகளை வேறு இடங்களுக்கு நகர்த்துவதாகவும் இது இலங்கையின் வெளிநாட்டு வருமானம் படிப்படியாகக் குறைவதற்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பிரதமரை பேசுமாறு கோரிய அவர், பின்னர் நாட்டை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளையும் தாங்கள் ஆதரிப்போம் என தெரிவித்தார்.

மேலும், உரத்துறை அமைச்சரும் விவசாய அமைச்சரும் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் இராணுவத் தளபதியிடம் உர நெருக்கடியை கையளிப்பதற்கான நடவடிக்கை விவேகமற்ற முடிவு எனவும் எதிர்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *