நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கெரவலப்பிட்டிய – யுகதனவி உடன்படிக்கை தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அது நிறைவேற்றப்படாத நிலையில் தான் அந்த ஒப்பந்தத்தை முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நியூபோர்ட்ரஸ் எனர்ஜி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள அமைச்சரவை பத்திரத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அந்த ஒப்பந்தம் ஸ்ரீலங்கா பவர் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. எனவே, இது அமைச்சரவையை முற்றிலும் தவறாக வழிநடத்தும் செயலாகவே கருத முடியும்.
இரண்டு ஆண்டுகளுக்கு இரு தரப்பினரின் அனுமதியின்றி இந்த ஒப்பந்தம் நாட்டுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ வெளியிடப்படக்கூடாது என்று பிரிவு 13 (1) தெளிவாகக் கூறுகிறது.
இந்த நாட்டின் சொத்துக்கள் தொடர்பில் இவ்வாறு ஒப்பந்தத்தில் நிபந்தனை விதிப்பது சாத்தியமா? இந்நாட்டில் உள்ள சொத்துக்கள் இந்நாட்டு மக்களுக்கே சொந்தம்.
நாட்டின் சொத்துக்கள் எந்தவொரு வகையிலும் நிதி அமைச்சருக்கோ அல்லது அதன் செயலாளருக்கு கைமாறவில்லை. எனவே, இந்நாட்டில் உள்ள எந்தவொரு சொத்துக்களிலும் கைச்சாத்திடப்படும் எந்தவொரு உடன்படிக்கையையும் அறிந்து கொள்வதற்கு இந்நாட்டு மக்களுக்கு பூரண உரிமை உண்டு.
ஆனால், இரு தரப்பினரும், அதாவது அமெரிக்க நிறுவனமும் ஒப்புக்கொண்டால் மட்டுமே, இந்த ஒப்பந்தத்தை வெளியிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன் இப்படி ஒரு சரத்து போடப்படுகிறது.
எனவே, ஒப்பந்தத்தை இரகசியமாக வைத்திருப்பதற்கான காரணம் தெளிவாக உள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.