2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் 2022ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கடந்த மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதனைத்தொடர்ந்து, வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகி, 22ஆம் திகதி வரையில் 7 நாட்களுக்கு இடம்பெற்றது.
இன்று மாலை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இதன்போது, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 153 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தன.
2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 93 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.
கடந்த மாதம் 23ஆம் திகதி முதல் ஆரம்பமான குழு நிலையிலான விவாதம் சனிக்கிழமை உள்ளடங்கலாக இன்று வரை 16 நாட்கள் இடம்பெற்றன.
இந்தநிலையில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 157 வாக்குகளிக்கப்பட்டிருந்ததுடன், எதிராக 64 வாக்குகளிக்கப்பட்டிருந்தன.
இதேவேளை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் 5 எம்பிக்கள், மனோ கணேசன், ப. திகாம்பரம், வி. இராதாகிருஸ்ணன், எம். வேலுகுமார், எம். உதயகுமார் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.