வரவு – செலவுத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக கடனுக்காக அமைச்சர் பசில் ராஜபக்ச அல்லல்பட்டுத் திரிகின்றார் என்றும், தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைக்காண்பதுதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்க முடியும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான த.சித்தார்த்தன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற நிதி அமைச்சு, பொருளாதார கொள்கைகள் குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், வரவு – செலவுத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக கடனுக்காக அமைச்சர் பசில் ராஜபக்ச அல்லல்பட்டுத் திரிகின்றார்.
இந்த வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும்போதே அவர் கடன் கேட்டு இந்தியாவுக்கு செல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றார்.
பலமான, செல்வாக்குமிக்க, நிதி விடயத்தில் மட்டுமல்லாது ஏனைய விடயங்களிலும் கூட பலமாகவுள்ள அமைச்சர்தான் பஸில் ராஜபக்ச. யுத்த காலத்தில் வடகிழக்கிலே இருக்கக்கூடிய இடங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்போது அந்த இடங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு, அங்கு தேவையான அபிவிருத்திகள் பற்றி அங்கிருக்கக்கூடிய அரசியல் சமூக, அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடி செயல்பட்டு வந்துள்ளார்.
ஆனால், இன்று அவரின் செயல்பாடுகள் நிதி நெருக்கடியினாலோ என்ன காரணத்தினாலோ கொஞ்சம் குறைவாகவே பலரும் பார்க்கின்றனர்.
வடக்கு, கிழக்கு 30, 40 வருடங்களாக யுத்தத்தை கண்டுவந்த இடம். ஏறக்குறைய ஒரு இலட்சம் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அங்குள்ளன. அவர்களுக்கான வருமானங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.
முக்கியமாக இந்த கொரோனா காலத்திலே உலகம் முழுக்க கஸ்டங்கள் உள்ள காலத்திலே நாளாந்த வருமானங்களை பார்த்திருக்கின்ற மக்கள் மத்தியிலே இந்த பெண் தலைமத்துவ குடும்பங்கள் மிக கஸ்டத்தில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு ஏதாவது ஒரு வழியிலே அரசு உதவவேண்டும்.
குடிசைக் கைத்தொழில், ஆடு, மாடு, கோழி வளர்த்தல் போன்றவற்றை அவர்களுக்கு கொடுக்கலாம் என பலர் கூறுகின்றனர். கொடுக்கலாம் அதில் பிரச்சினையில்லை.
ஆனால், இன்று பல மக்களிடம் ஆட்டிறைச்சி கோழி இறைச்சி வாங்கி சாப்பிட பணம் இல்லை. இதுதான் உண்மை. ஆகவே அவர்கள் உற்பத்தி செய்யக்கூடிய கைத்தொழில் பொருட்கள் எல்லாம் வீடுகளில் தேங்கிக்கிடக்கின்றன. இவற்றை சந்தைப்படுத்துவதற்கு உதவி செய்வதுடன் அவர்கள் அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கு ஏதாவது ஒரு வழியில் அமைச்சர் உதவ வேண்டும்.
இந்தியா சர்வதேச நாணய நிதியம், பங்களாதேஸ் இப்படி பல நாடுகள் அமைப்புகளிடம் கடன் கேட்கும் நிலைமையிலேயே நாங்கள் இருக்கின்றோம்.
இவ்வளவு பொருளாதார நெருக்கடி வந்தமைக்கு மிக முக்கிய காரணம் இந்த அரசோ கொரோனாவோ மாத்திரமல்ல. ஏறக்குறைய சுதந்திரம் பெற்ற காலம் முதல் இந்த நாட்டில் இருக்கக்கூடிய ஸ்திரமில்லாத தன்மையே இதற்கு காரணம்.
இது தேசிய இனப்பிரச்சினையால் வந்த பிரச்சினை. இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கு பல மாநாடுகள், கூட்டங்கள், ஒப்பந்தங்கள் எல்லாம் செய்யப்பட்டன. ஒவ்வொரு ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்பட்டன.
இந்த நாட்டுக்குள் மாத்திரமல்ல, நாட்டுக்கு வெளியே கூட நடந்தன. நான் இந்த அரசை மட்டும் கூறவில்லை ஒவ்வொரு அரசும் ஒவ்வொரு முயற்சிகளை எடுக்கும்போது அதனை எதிர்க்கட்சிகள் குழப்புவதே வழமை. திம்பு, ஒஸ்லோ பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படாமையே இந்த ஸ்திரமற்ற நிலைமைக்கு காரணம்.
யுத்தம் முடிந்தவுடன் புலம்பெயர் தமிழர்கள் பலர் இங்கு நிதிகளைக்கொண்டு வந்து முக்கியமாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க விரும்பினர்.
ஆனால், அதற்கு பெரும் தடைகள் ஏற்படுத்தப்பட்டன. இன்று கூட மீன்பிடித்துறையில் முதலீடு செய்ய பலர் தயாராக இருக்கின்றனர். ஆனால், அமைச்சர் அதனை உடனடியாக செய்ய கையெழுத்துப் போட்டுக்கொடுத்தால் கூட தடைகள் ஏற்படுத்தப்பட்டு, முதலீடு செய்ய வந்தவர்கள் திரும்பி செல்லும் நிலைமைகளும் ஏற்படுகின்றது.
மீன்பிடி அமைச்சர் எடுத்த முயற்சிகள் எல்லாம் இந்த தடைகளால் பின்தள்ளப்படுகின்றன. இவ்வாறான பிரச்சினைகளை நிவர்த்தி செய்தால்தான் இந்த நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காணும்.
முதலாவதாக, தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைக்காண்பதுதான் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்க முடியும்.
இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் தான் இந்த நாட்டின் பிரஜை என்பதை உணரக்கூடிய வகையில் இருந்தால் இன்று கூட வெளிநாடுகளிலிருந்து முதலீடுகளை செய்ய பலர் தயாராகவுள்ளனர்.
முதலீடுகளை செய்ய ஏற்படுத்தப்படும் தடைகள், முதலீடுகள் பாதுகாக்கப்படுமா என்ற அச்சம் என்ற இரண்டையும் நீங்கள் இல்லாமல் செய்ய வேண்டும். அமைச்சர் பசிலுக்கு இதற்கான திறமை, வல்லமை இருக்கின்றது. அத்துடன் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலும் அவரின் ஆதிக்கம் நிச்சயம் இருக்கும் எனத் தெரிவித்தார்.