35ஆயிரம் கண்கள் யாருடையவை: கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டு கடலில் வீசப்படுகிறார்களா? சபையில் சிறிதரன் எம்.பி. கேள்வி

‘கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டு கடலில் வீசப்படுகிறார்களா? யாழ்ப்பாணக் கடற்கரைகளில் ஒதுங்கும் சடலங்கள் அவர்களுடையனவா?’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

யாழ்ப்பாண குடாநாட்டு கரையோரங்களில் 6 சடலங்கள் கரையொதுங்கின. இதில் நெடுந்தீவில் கரையொதுங்கிய சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் உள்ளது. வல்வெட்டித்துறை, பருத்தித்துறை பகுதிகளில் மீட்கப்பட்ட 3 சடலங்கள் பருத்தித் துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

கட்டைக்காட்டில் மீட்கப்பட்ட சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மருதங்கேணி பொலிஸ் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் எங்கே? அதனை பொலிஸார் சென்று பார்த்துள்ளனர்.

அந்த சடலத்துக்கு என்ன நடந்தது? கரையொதுங்கிய சடலங்களும் காணாமல்போவது மிக ஆபத்தானது.

இலங்கை அரசாங்கத்தால் பாகிஸ்தான் வைத்தியசாலைகளுக்கு 35ஆயிரம் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக, பிரியந்தகுமார் இறந்தபோது, பாகிஸ்தான் வைத்தியர் ஒருவர் தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளிவந்தன.

அவ்வாறு கண்கள் தானம் செய்யப்பட்டிருந்தால் அவை யாருடையவை என்ற பெயர்ப்பட்டியலை வெளியிடுங்கள் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *