இலங்கை இராணுவ அதிகாரிகள் இருவருக்கு அமெரிக்கா தடை விதிப்பு!

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் மேலும் இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

சுர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான தடைகளை அமெரிக்க வெளியுறவுத்துறை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

அமெரிக்காவின் விரிவுபடுத்தப்பட்ட தடைப் பட்டியலில் கொழும்பில் 2008. 09 காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபராக குறிப்பிடப்படும், இலங்கை கடற்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான நேவி சம்பத் என அழைக்கப்படும், லெப்.கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சி மற்றும் யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் சிறுவர்கள் உட்பட எட்டு தமிழர்களை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஆர்.எம்.சுனில் ரத்நாயக்க ஆகியோரே உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தடைப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவிற்குள் நுழைய தடை அமுலில் இருக்கும்.

போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்காக அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட இலங்கைப் படைத் தரப்பைச் சேர்ந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது இவர்கள் ஆவர்.

2020 ஆம் ஆண்டில், இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது, அவரது கட்டளைப் பொறுப்பின் மூலம், மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டது பற்றிய நம்பகமான தகவல்கள் காரணமாக எங்கள் வெளியுறவுக் கொள்கையின் மையத்தில் மனித உரிமைகளை வைப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என அமெரிக்க .ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் எங்கு நடந்தாலும் அவற்றின் மீது கவனத்தை ஈர்க்கவும் பொறுப்புக்கூறலை மேம்படுத்தவும் பொருத்தமான கருவிகள் மற்றும் அதிகாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவில் விரிவுபடுத்தப்பட்ட தடைப் பட்டியலில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 15 பேர் மற்றும் 10 நிறுவனங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *