தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலகம் தேசிய ரீதியில் முதலாவது இடத்தைப் பெற்று அதி சிறந்த அரச அலுவலகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுள்ளது.
பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் வழிகாட்டலுக்கிணங்க தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால், வருடாந்தம் தேசிய உற்பத்தித்திறன் விருதுக்கான போட்டி நடத்தப்படுகிறது.
உற்பத்தித்திறன் எண்ணக்கருக்கள் பற்றி நிறுவனம் கொண்டுள்ள அறிவை நடைமுறையில் யதார்த்தமானதாக மாற்றுகின்ற செயற்பாங்கு அதன்போது மதிப்பீட்டுக்கு உள்ளாக்கப்படுகின்றது.
மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை உச்ச வினைத்திறனுடனும் பயனுறுதியுடனும் பயன்பாட்டுக்கு எடுத்து நிறுவனம்சார் நோக்கங்களை அடைவதன் உன்னதமான தன்மையை தொழில்நுட்பரீதியாக, ஒழுங்கமைந்த மதிப்பீட்டுச் செயற்பாங்கினூடாக அளவிட்டு, தேசிய மட்டத்தில் மதிப்பீட்டுக்கு உள்ளாக்குவதே இந்த போட்டியின் முக்கியமான குறிக்கோளாகும்.