250 கி.கி. போதைப்பொருளுடன் வெளிநாட்டு மீன்பிடி கப்பலை கடற்படையினர் கைப்பற் றினர்.

  • 6 சந்தேகநபர்கள் கைது

சுமார் 250 கிலோ போதைப்பொருளுடன் சர்வதேச கடற்பகுதியில் மற்றுமொரு வெளிநாட்டு மீன்பிடி படகொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கைக்கு தெற்கே சுமார் 900 கடல் மைல் (1665 கி.மீ.) தொலைவில் வைத்து கைப்பற்றப்பட்ட இந்த படகிலிருந்து 6 வெளிநாட்டு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தலைமையகம் அறிவித்துள்ளது.
9 சாக்குகளில் மறைத்து வைத்திருந்த 225 சிறிய ரக பொதிகளாக பொதி செய்யப்பட்ட 250 கிலோகிராம் போதைபொருளே கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை மேலும் தெரிவிக்கின்றது.
கடற்படைக்கு கிடைத்த இரகசிய புலனாய்வு தகவலுக்கு அமைய, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுடன் இணைந்து இந்த சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கடற்பரப்பில் பல நாட்கள் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான குறித்த கப்பலை வழிமறித்து அதனை சோதனையிட்ட கடற்படையினர் 06 வெளிநாட்டு சந்தேகநபர்களுடன் பெருமளவான போதைப் பொருட்களை ஏற்றிச் செல்வதை உறுதிப்படுத்தியுள்ளனர்
இதனையடுத்து இலங்கைக்கு தெற்கே சுமார் 900 கடல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் வைத்து கைப்பற்றப்பட்ட மேற்படி வெளிநாட்டு மீன்பிடி படகு இலங்கை கடற்படையினரின் கப்பல் மூலம் கரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
இலங்கை கடற்படையினரால் அண்மைக் காலமாக நடத்தப்பட்ட போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் 290 கிலோ ஹெராயினுடன் உள்ளூர் மீன்பிடிக் கப்பல் ஒன்று 2021 ஓகஸ்ட் 30ஆம் திகதி கைப்பற்றப்பட்டது.
அதேபோன்று கடந்த செப்டெம்பர் 04 மற்றும் 10ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது 336 கிலோ மற்றும் 170 கிலோ ஹெராயின்களை ஏற்றிச் சென்ற மேலும் இரண்டு வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்களையும் கடற்படையினர் மடக்கிப் பிடித்துள்ளானர்.
இந்த ஆண்டு மாத்திரம் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு நடவடிக்கைகளின் மூலம் 13.16 பில்லியன் ரூபாய் பெறுமதியான போதை பொருட்களை கைப்பற்ற முடிந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.
இதேவேளை, போதைப் பொருளுடன் தற்போது கைப்பற்றப்பட்டுள்ள படகு ஓரிரு நாட்களுக்குள் கடற்படையினரால் கரைக்கு கொண்டுவரப்படவுள்ளதுடன், 06 வெளிநாட்டு பிரஜைகளுடன் மேற்படி கப்பல் விசாரணைகளுக்காகவும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட உள்ள சட்ட நடவடிக்கைகளுக்காகவும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *