இரத்தினப்புரி மாவட்டத்தில் விவசாயம் உள்ளிட்ட நிலத்துடன் தொடர்புடைய தொழில்களை வாழ்வாதாரமாகக் கொண்ட பலரும் எலிக்காய்ச்சல் அச்சத்திலேயே தமது அன்றாட கடமைகளில் ஈடுபடுகின்றனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில், ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 19 சுகாதாரப் பிரிவுகளில் 344 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 5 மரணங்களும் பதிவாகியுள்ளன.
பெல்மடுல்ல, நிவித்திகல, கலவான, கிரிஎல்ல மற்றும் எல்பாத ஆகிய பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் எலிக்காய்ச்சலால் 5 மரணங்கள் பதிவாகியுள்ளன. பலாங்கொடை பிரதேசத்திலேயே அதிகளவானோர் இனங்காணப்பட்டுள்ளனர்.
குறித்த பிரிவில் 35 பேர் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடமும் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் அதிகம் இனங்காணப்பட்ட மாவட்டமாக இரத்தினபுரி மாவட்டமே பதிவாகியுள்ளது.
இரத்தினப்புரி இரத்தினக்கல் அகழ்வு மற்றும் வியாபாரத்திற்கு உலக புகழ்பெற்ற இடம் என்றாலும், அந்த மாவட்டத்தில் விவசாயமும் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக காணப்படுகின்றது.
இரத்தினபுரி மாவட்டம் வருடாந்தம் சராசரியாக 50 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியை உற்பத்தி செய்கிறது. பயறு உள்ளிட்ட வேறு பயிர்களும் செய்கை செய்யப்பட்டுகின்றது. இவ்வாறு விவசாயத்தில் ஈடுபடும் மக்களே எலிக்காய்ச்சலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.