
(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கம் ஏற்பாடு செய்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று (10.12.2021) மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்திற்கு முன்னால் இடம் பெற்றது.
டிசம்பர் மாதம் 10ம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். இந்த தினத்தில் மனித உரிமைகளை பாதுகாக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், இலங்கை நாட்டில் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவித்தனர்.
அம்பாரை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி உட்பட பலர் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் அதன் இணைப்பாளர் அப்துல் அஸீஸிடம் மகஜர் ஒன்றையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கையளித்தனர்.
