திருக்கோவில் பிரதேசத்தில், பிரதான வீதியில் நேற்று நள்ளிரவில் தீடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலையால் இப்பிரதேசத்தில் முறுகல் நிலைமை ஏற்பட்டதுடன், இப்பிரதேச மக்கள் இச்செயற்பாட்டைக் கண்டித்து எதிர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொத்துவில் கல்முனை பிரதான வீதியில் தாண்டியடிக்கும் சங்கமங்கண்டிக்கும் இடையிலான பிரதேசத்திலுள்ள காட்டுப்பிரதேசத்திலேயே இவ்வாறு புத்தர் சிலை திடீரென வைக்கப்பட்டுள்ளதுடன் பொத்துவில் பிரதேசத்திலுள்ள பிரபல பிக்குகள் சிலரும் இங்கு காணப்பட்டனர்.
இதையடுத்து, இப்பிரதேச பொதுமக்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகள் அதிகாலை 5மணி முதல் இங்கு ஒன்று கூடி நில ஆக்கிரமிப்பாளர்களின் இச்செயற்பாட்டைக்கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களுடன் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் ஏ.றஹீம் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் கமலராஜன் ஆகியோரும் காணப்பட்டனர்.
சிலை அகற்றப்படும் வரை இங்கிருந்து நகரப்போவதில்லையென போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் பொத்துவில் மற்றும் திருக்கோவில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிந்தது.

