எல்லா முஸ்லிம்களும்தீவிரவாதிகள் அல்லர் இந்த எண்ணக்கருவைதேரருக்கு விதைத்தோம்

– கிழக்குதேசம் வஃபா பாருக் கூறுகிறார்

முஸ்லிம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் அல்லர் என்கிற எண்ணத்தை ஞானசார தேரரின் மனத்தில் விதைத்து உள்ளோம் என்று கிழக்குதேசம் வஃபா பாருக் தெரிவித்தார்.

ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதி செயலணி கடந்த வாரம் கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டது.

இது அம்பாறை மாவட்டத்துக்கு வந்தபோது தாருஸ்சபா குழுமத்தின் ஏற்பாட்டில் அதன் தலைமையகத்தில் கல்முனையில் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது.

இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக பொருளாளரும், கிழக்குதேசம் அமைப்பின் ஸ்தாபகருமான வஃபா பாருக் அடங்கலாக அரசியல் சமூக பொது நல ஊடக செயற்பாட்டாளர்கள் பங்கேற்றதுடன் செயலணி முன்னிலையில் கருத்துகளை பதிவேற்றினார்கள்.

நாம் இது தொடர்பாக வஃபா பாருக்கை நேற்று வெள்ளிக்கிழமை தொடர்பு கொண்டு கேட்டபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு

ஞானசார தேரர் தேசியவாத சிந்தனை உடையவர். அவருக்கென தனியான பாதை ஒன்றை வகுத்து செயற்பட்டு கொண்டு இருக்கின்றார்.

இந்நாட்டில் எல்லா மக்களுக்கும் பொதுவான சட்டத்தை கொண்டு வர ஜனாதிபதி முயல்கின்றார். இதற்கான ஆலோசனைகளை பெற செயலணி அமைத்து அதன் தலைவராக ஞானசார தேரரை நியமித்து உள்ளார்.

ஞானசார தேரருக்கு முஸ்லிம்கள் குறித்து அபிப்பிராயம் உள்ளது. எல்லா முஸ்லிம்களும் தீவிரவாத போக்கு உள்ளவர்கள் என்று நம்புகின்றார். அவரின் நம்பிக்கை தவறானது.

நாம் அவரை வரவேற்றோம். அவருக்கு அன்பளிப்புகள் வழங்கினோம். இதன் மூலமாக முஸ்லிம்கள் குறித்த அவரின் எண்ணம் மாறும் என்பது எமது நம்பிக்கை. அதற்கான சமிக்ஞைகள் தெரிய தொடங்கி உள்ளன.

ஜனாதிபதிக்கு செயலணி பெப்ரவரி மாதம் அதன் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது. அதில் இம்மாற்றங்கள் எதிரொலிக்கும் என்பது எமது விசுவாசம். முக்கியமாக முஸ்லிம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் அல்லர் என்று ஞானசார தேரர் தலைமையிலான செயலணி அறிக்கையிட வேண்டும். அதுவே எமது பெருவிருப்பம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *