யாழில் இன்று கூடுகிறது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு; மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் ஆராய்வு

மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்வது தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் கலந்துரையாடல் இன்று (12) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், குறித்த கலந்துரையாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட செயலகத்தின் எதிரில் போராட்டமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்தல் என்பவற்றுக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய அண்மையில் நியமித்திருந்தார்.

உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ. எச். எம். டி. நவாஸ், ஓய்வுபெற்ற காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி, யாழ் மாநகரசபை உறுப்பினர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கிறார்கள்.

எல்எல்ஆர்சி அறிக்கை, பரணகம அறிக்கை, தருஸ்மன் அறிக்கை ஆகியவை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதே இந்த குழுவின் நோக்கம்.

இந்த குழு தனது இடைக்கால அறிக்கையை ஜூலை 20ஆம் திகதி கையளித்திருந்தது.

இந்த நிலையில் வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட தரப்புக்களின் கருத்தறிய இந்த கலந்துரையாடல் நடத்தப்படுகிறது.

இன்று யாழ் மாவட்ட செயலகத்திலும், நாளை கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கமொன்றின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை, இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாதிக்கப்பட்ட தரப்பினர், மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *