அரச சேவையாளர்களின் சம்பளத்தை 18000/- ரூபாவால் அதிகரிக்க வேண்டும். ஒன்றிணைந்த இலங்கை அரச சேவைகள் தொழிற்சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை.

அரச சேவையாளர்களின் சம்பளத்தை 18000/- ரூபாவால் அதிகரிக்க வேண்டும்.
ஒன்றிணைந்த இலங்கை அரச சேவைகள் தொழிற்சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்,பாறுக் ஷிஹான், றாசிக் நபாயிஸ்)

அரசு சேவையாளர்களின் மாதாந்த சம்பளத்தை  18000/- ஆயிரம் ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என ஒன்றிணைந்து இலங்கை அரச சேவையாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கையை முன்வைத்துள்ளது. தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் மாநாடு இன்று (12.12.2021) கல்முனையில் நடைபெற்றது இங்கு கருத்து தெரிவிக்கும் போதே தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில்  அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் ,  இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கம், வடக்கு கிழக்கு அரசாங்க  உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க , விவசாயப் போதனாசிரியர்கள் தொழிற்சங்கம் சங்கம், கிழக்கு மாகாண சமூக சேவைகள், கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற் சங்கம், ஆகிய தொழிற்சங்கங்கள் இதில் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தொழிற்சங்க பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கும் போது, தற்போது நாட்டில் உள்ள அனைத்து அத்தியவசிய பொருட்களின் விலைகளும் மிக அதிகளவில் உயர்ந்துள்ளன. எரிபொருள் விலை உயர்ந்து போக்குவரத்து செலவு அதிகரித்து விட்டது. கேஸ்விலை , மாவிலை , அரிசி விலை என்பன உயர்ந்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. மருந்துப் பொருட்கள் மற்றும் அத்தியவசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்துவிட்டன. அனைத்தினதும் விலைகள் உச்சத்திற்கு சென்றுள்ளன. விலையேற்றங்களை கணிப்பீடு செய்கையில் , நான்கு அல்லது ஐந்து உறுப்பினர்களை கொண்ட குடும்பம் ஒன்றின் வாழ்க்கைச் செலவு மாதமொன்றிற்கு ரூபா 25,000 / -இலும் கூடுதலாக அதிகரித்துள்ளதை கவனத்திற் கொள்ள வேண்டும். நாட்டில் தற்போதைய பொருளாதார நெருக்கடி பற்றி ஊடகங்கள் வாயிலாக நாங்கள் அறியக்கூடியதாக உள்ளது . அதேவேளை அரச சேவையாளர்கள் வாழ்க்கையை கொண்டு நடத்துவதென்பது , மிகவும் கஷ்டமாகவும் இடர்பாடாகவும் உள்ளது. அரசிடம் இருந்து சம்பள அதிகரிப்பைப் பெற்றுக் கொள்வதைத் தவிர வேறு எந்த மார்க்கமும் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இல்லாதிருப்பதையும் தாங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று திடமாக நம்புகின்றோம். எனவே தயவு செய்து , அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் ரூபா 18,000/ – இற்கு குறையாத சம்பள அதிகரிப்பு ஒன்றினை 2022.01.01 இல் இருந்து வழங்குவதற்கு ஆவன செய்யுமாறு  கோரிக்கை முன்வைக்கின்றோம்.

குறித்த எமது கோரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்படாத பட்சத்தில் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நாடு பூராகவும் உள்ள ஒன்றிணைந்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இணைந்து பாரிய அளவிலான கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு நாம் பின் நிற்கப்போவதில்லை என்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் இங்கு வலியுறுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *