தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இன்று கொழும்பில் கூடி ஆராய்வு

தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இன்று கொழும்பில் கூடி ஆராய்வு

எதிர்வரும் 21ஆம் திகதி பொது உடன்பாடு

தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இன்று கொழும்பில் நடத்திய கூட்டம் நிறைவடைந்துள்ளது. மீண்டும் எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பில் சந்தித்து பேசுவதென இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே, கூட்டு தீர்மானமொன்றில் கையெழுத்திடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஒழுங்கமைப்பில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், முதன்முறையாக நவம்பர் 6ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடியிருந்தனர்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் முழுமையாக நிறைவேறும் வரை – சமஷ்டி அடிப்படையிலான அதிகார பரவலாக்கல் அமுலாகும்வரை- அதன் முதல்படியாக, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட வலுவான உடன்படிக்கையான இந்திய – இலங்கை உடன்படிக்கையில் வாக்களித்ததன்படி, 13, 16வது திருத்தங்களை முழுமையாக அமுல்ப்படுத்த வேண்டும், அடுத்த படிமுறையாக சமஷ்டி அடிப்படையிலான நிரந்தர அரசியல் தீர்வு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டுமென இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தை கோருவதே இந்த கூட்டு முயற்சியின் நோக்கமென தெரிவிக்கப்படுகிறது.
விசேடமாக, அனைத்து தமிழ் தரப்பும் ஒன்றுபட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்த கோரிக்கையை முன்வைப்பதென்றும், இதற்காக தமிழக முதல்வர் மற்றும் இந்திய பிரதமரை சந்திப்பதென்றும் திட்டமிட்டு, இந்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
பம்பலப்பிட்டி, க்ளோபல் டவர் ஹோட்டலில் நடந்த இன்றைய கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், புளொட்டை பிரதிநிதித்துவப்படுத்தி ஆர்.இராகவன், ஈ.பி.ஆர்.எல்.எவ் ஐ பிரதிநிதித்துவப்படுத்தி க.சர்வேஸ்வரன் கலந்து கொண்டனர்.
21 ஆம் திகதி கூட்டறிக்கை வெளியிடப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *