தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் கொழும்பில் சந்தித்துப்பேசி கூட்டு தீர்மானம் ஒன்றில் கைச்சாத்திடத் தீர்மானித்துள்ளன.
கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்,அத்துடன், “13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவதற்குப் பதிலாக அதிலிருந்து சில அதிகாரங்களை நீக்குவதற்கே இன்றைய ஆட்சியாளர்கள் முயற்சிக்கிறார்கள்”, என்றும் சாடினார்.
கொழும்பு சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
புதிய அரசியல் சாசனம் விரைவில் வெளிவரலாம் என்ற கருத்து நிலவுகின்றது. எங்களுக்கு உண்மை என்னவென்று தெரியாது. இவ்விதமான சூழலில், ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கருத்தும் நிலவுகின்றது.
தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படுதல், திட்டமிட்ட குடியேற்றங்கள் நிகழ்த்தப்படுதல் என இவ்விதமான நிலைமைகள் தொடர்கின்றன.அரசாங்கத்தின் நோக்கம் என்ன? அவர்கள் என்ன செய்வார்கள் என்பது எவராலும் சொல்லமுடியாது.
ஆனால் அவர்களின் போக்கு இறுகிவரும் கடும் போக்காக மாறும் என்று சந்தேகிப்பதற்கு போதுமானளவு இடம் உண்டு.
என்னவிதமான நிலைப்பாட்டை நாங்கள் எடுக்க வேண்டும்? பின்பற்றவேண்டும்? என்னவிதமான கோரிக்கையை விட வேண்டும் என்று ஆலோசித்து விரைவில் அறிவிப்போம்.
13ஆவது திருத்தச் சட்டம் இன்று வரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அதை நிறைவேற்றுவதற்கு பதிலாக சில அதிகாரங்களை அதிலிருந்து நீக்குவதற்குமான சூழல் நிலவுகின்றது. இவ்விதமான சூழலில் 13ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப் பட வேண்டும் என்று இங்கு கூடியிருக்கிறார்கள்.
ஒற்றுமையான – ஒருமித்த கோரிக்கை தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் முன்வைக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. எல்லோரும் எங்களுடைய கருத்துக்களை கூறினோம். எந்தவிதமான வேற்று மையான கருத்துக்களும் இல்லை -என்றார்.