ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் திருப்தியில்லை: கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் புறக்கணிப்பு!

ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் திருப்தியில்லையென தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களில் ஒரு பகுதியினர் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவால் தமக்கு தீர்வு கிடைக்காது என தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் புறக்கணிப்பில் இன்று ஈடுபட்டிருந்தனர்.

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் ஆகியவற்றின் கண்டுபிடிப்புக்களை மதிப்பீடு செய்தல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு இன்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டிருந்தது.

இதன்போதே, குறித்த ஆணைக்குழுவிலும் தமக்கு தீர்வு பெற்றுத்தர முடியாது எனவும், ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆணைக்கழுக்கள், காணாமல்போனோர் அலுவலகத்தால் எவ்வித தீர்வும் எட்டப்படாத நிலையில் இந்த ஆணைக்கழுவும் எமக்கு எத்தீர்வையும் வழங்காது என தெரிவித்தே அவர்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது, கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது சங்க தலைவி தெரிவிக்கையில்,

இன்று மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாங்கள் பதினொரு வருடமாக ஜனாதிபதி ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழுக்கள் உள்ளிட்டவற்றை சந்தித்து முறைப்பாடுகளை செய்துள்ளோம்.

காணாமல்போனோர் அலுவலகத்திற்கு ஐந்து பேரினது தகவல்களை ஒப்படைத்தோம். அந்த ஐந்து பேரினது தகவல்களைக்கூட பெற்றுத்தரவில்லை. அவர்களால் தரவும் முடியவில்லை.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ஆணைக்கழு சென்று மாவட்டச் செயலகத்தில் தங்களிற்கு ஏற்றவர்களைக்கொண்டு தமக்கு சாதகமாக ஜெனிவாவில் விடயங்களை சமர்ப்பிப்பதற்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என தமக்கு ஏற்றவர்களை அழைத்து பொய்யான வாக்குமூலங்களை எடுத்துள்ளார்கள்.

எத்தனையோ அணைக்குழுக்களிடம் சென்றும் எமக்கு தகவல் ஏதும் கிடைக்கவில்லை. ஆகையால், நாங்கள் உள்ளே செல்லாது, இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவை எதிர்த்து வெளியில் நின்று போராடுகின்றோம் என அவர் தெரிவித்தார்.

மூன்று வாரங்களுக்குள் நாட்டில் பஞ்சம் ஏற்படலாம்: ஆளும்தரப்பு எம்.பி. எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *