வவுனியா – கள்ளிக்குளம் சிதம்பரம் பகுதியை சேர்ந்த மக்கள் தமது அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு வவுனியா பிரதேச செயலாளருக்கு மகஜர் கையளித்தனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்கள், குறித்த கிராமத்தில் இருந்து பிரதான வீதிக்கு செல்லும் 10 கிலோமீற்றர் நீளமான வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாததுடன் குன்றும் குழியுமாக காட்சியளிக்கின்றது.
தற்போது மழையுடனான காலநிலை நிலவி வருகின்றமையால் அந்த வீதியினை பயன்படுத்தும் கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு மத்தியிலேயே தமது பயணத்தை தொடர்கின்றனர்.
பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் முதல் வைத்தியசாலை செல்லும் நோயாளர்கள் வரை அனைவரும் சொல்லொணா துன்பங்களுடனேயே தமது பயணத்தை தொடர்கின்றனர்.
இதேவேளை, எமது கிராமத்துக்கு பேருந்துச்சேவையும் நீண்டகாலமாக இல்லாத நிலமை காணப்படுகின்றது.
கூலித்தொழிலை நம்பி வாழ்க்கை நடாத்தும் நாம் நகருக்கு செல்ல வேண்டுமானால் 1,000 தொடக்கம் 1,500 ரூபாய் வரையான பணத்தினை முச்சக்கரவண்டிக்கு வழங்கியே சென்றுவருகின்றோம்,
எனவே, எமது நிலமையை உணர்ந்து உரிய அதிகாரிகள் வீதியை சீரமைப்பதுடன், பேருந்து சேவையினையும் ஏற்படுத்தி தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களது கோரிக்கையினை பரிசீலித்த உதவிப்பிரதேச செயலாளர் ச.பிரியதர்சினி அடுத்த வருடம் வகுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களில் குறித்த கிராமத்தின் வீதியினை திருத்துவதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக தெரிவித்ததுடன், பேருந்துச்சேவை தொடர்பாக தொடர்புடைய திணைக்களத்துடன் கலந்துரையாடுவதாக தெரிவித்தார்.