முதலை கண்ணீர் வடித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற கனவு காணுகிறது எதிர்க்கட்சி! மகிந்தானந்த

ஐந்தாண்டுகளாக கிராமங்களில் உள்ள அப்பாவி மக்களுக்கு ஐந்து சதத்தைக் கூட வழங்காதவர்கள், தற்போது மக்கள் குறித்து முதலை கண்ணீர் வடித்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற கனவு கண்டு வருகின்றனர் என விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மேலும், 2022 ஆம் ஆண்டில் நாட்டு மக்களின் வாழ்க்கை ஒளிமயமாக்கும் பாரிய அபிவிருத்தி புரட்சி நாட்டுக்குள் மேற்கொள்ளப்படும்.

எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் ஆறு மாதங்களே எம்மால் சுதந்திரமாக பணியாற்ற முடிந்தது. முழு உலகத்தையும் பலியெடுத்த கொரோனா நோய் எமது நாட்டை பீடித்துக்கொண்டது.

எனினும் அரசாங்கம் மக்களை நோயால் மரணிக்கவிடாது, ஏனைய வேலைகளுக்கு முன்னதாக மக்களை வாழ வைக்கும் தடுப்பூசி வேலைத்திட்டத்தை ஆரம்பித்தது.

நாம் இப்போது உலகில் முன்னேறிய நாடுகளை தாண்டி முன்னுக்கு வந்துள்ளோம். இதனால், அடுத்தாண்டு எமது நாட்டுக்கு மீண்டும் நல்ல காலம் பிறக்கும்.

எதிர்க்கட்சியும் குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணி இவற்றுக்கு பயந்து, இளைஞர், யுவதிகளை பயன்படுத்தி, சமூக வலைத்தளங்கள் வழியாக பல்வேறு நிலைப்பாடுகளை சமூகமயப்படுத்த முயற்சித்து வருகிறது.

இவற்றை நம்பி ஏமாற வேண்டாம். குறிப்பாக எமது பிரதேச, நகர சபைகளின் உறுப்பினர்கள், எதிர்க்கட்சிகள் கூறுவதை கேட்டு, செய்வதை பார்த்து அரசாங்கம் மீது வெறுப்படைய வேண்டாம்.

உங்களை மன ரீதியாக வீழ்ச்சியடைய செய்து நாட்டை அராஜக நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே அவர்களின் தேவையாக இருக்கின்றது.

இந்தாண்டு மிகப் பெரிய தொகை பணம் கிராமங்களின் அபிவிருத்திக்காக கிடைத்துள்ளது. கிராம மக்களுடன் இணைந்து அந்த பணத்தை பயன்படுத்தி மீண்டும் கிராமங்களை அபிவிருத்தி செய்ய தயாராகுங்கள்.

கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து, அவர்களுடன் உரையாடி புதிதாக மீண்டும் பயணத்தை ஆரம்பியுங்கள். பசளை பிரச்சினையை பயன்படுத்தி ஊடகங்கள் வழியாக எனக்கு எதிராக பல்வேறு விதமான அவதூறுகளையும் அவமதிப்புகளையும் ஏற்படுத்தினர்.

அவற்றின் மூலம் பலத்தை பெற்றுக்கொண்டேனே அன்றி மன ரீதியாக தளர்ந்து விடாது அரசாங்கத்தின் கொள்கைக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *