முஸ்லிம் கட்சிகளின் செயற்பாடுகளால் முழு முஸ்லிம் சமூகத்துக்கும் அவப்பெயர்! இம்ரான் எம்.பி

பல்லின சமூகம் வாழும் இந்த நாட்டில் முஸ்லிம் சமுகத்தின் மீது மாற்று மத சகோதரர்கள் தப்பெண்ணம் கொள்ளும் வகையில் செயற்பட்டு சமுகத்தைக் காட்டிக் கொடுக்கும் வேலையை முஸ்லிம் காங்கிரசும், அகில இலங்கை மக்கள் காங்கிரசும் கைவிட வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஸாத் பதியுத்தீன் ஆகியோரின் விருப்பத்துடன் தான் அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் தெரிவிக்கும் காணொலி சமுக வலைத்தளங்களில் தற்போது பரவலாகி வருகின்றது.

இக்கட்சிகளோடு நடந்த பேச்சுவார்த்தைகளில் தானும் ஈடுபட்டதால் அல்லாஹ் மீது ஆணையாக இதனை உறுதிப்படுத்துவதாக 20க்கு ஆதரவாக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் பலரும் கலந்து கொண்ட கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20க்கு ஆதரவாக வாக்களித்ததற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி வருகின்றனர். இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

20க்கு ஆதரவாக வாக்களித்த தங்களது எம்.பிக்களை கட்சியிலிருந்து விலக்கியுள்ளோம். கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து அவர்களை விலக்கியுள்ளோம் என்று ஊடகங்களில் அறிக்கை விட்டதைத் தவிர இக்கட்சிகள் இவர்களுக்கெதிராக வேறு என்ன நடவடிக்கை எடுத்துள்ளன என்று கேட்க விரும்புகின்றேன்.

தலைவர்களுக்கும், தங்களது எம். பிக்கள் 20 க்கு ஆதரவாக வாக்களித்தற்கும் தொடர்பு இல்லை என்றால் இதுவரை இந்த எம்.பிக்களுக்கெதிரான மேலதிக நடவடிக்கைக்கு இக்கட்சிகள் வந்திருக்கும். தலைவர்களது அனுசரணையோடு எம்.பிக்கள் செயற்பட்டதால் தான் அவர்களால் வெறும் ஊடக அறிக்கையோடு மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளை இக்கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் 20க்கு ஆதரவாக வாக்களித்த தங்களது எம்.பிக்களை மன்னித்து விட்டதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறி அப்படியானவர்களுக்கு கட்சியில் உயர் பதவிகள் வழங்குவது தான்.

மர்ஜான் பளீல் எம்.பி கூறுவதையும், இக்கட்சிகளின் செயற்பாடுகளையும் சிந்தித்துப் பார்க்கின்ற போது இந்தத் தலைவர்கள் சமுகத்தை ஏமாற்றி வருகின்றார்கள் என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ள முடிகின்றது.

இவர்கள் அங்கொன்றும், இங்கொன்றும் பேசுவதால் தான் இந்நாட்டு முஸ்லிம்கள் பெரும் அவமானங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். நம்பிக்கைக்கு துரோகம் செய்பவர்கள், தொப்பி பிரட்டிகள் என்றெல்லாம் முஸ்லிம் சமுகம் அவப்பெயரை சம்பாதித்துள்ளது.

முஸ்லிம்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்ல. அற்ப இலாபங்களுக்காக இடம் மாறுவார்கள். அவர்கள் கொள்கையற்ற சமுகம் என்றெல்லாம் மாற்று மத சகோதரர்கள் முஸ்லிம் சமுகத்தைப் பற்றி எடை போட இக்கட்சிகளே காரணமாக இருக்கின்றன.

அது மட்டுமல்லாது இன்று இந்நாட்டில் பெரும்பான்மை சமுகத்தினர் முஸ்லிம் சமுகத்தின் மீது தப்பெண்ணம் கொள்வதற்கும் விரோதமான கருத்துக்களை வெளியிடுவதற்கும் இந்த முஸ்லிம் கட்சிகளின் செயற்பாடுகள் தான் காரணமாக அமைந்துள்ளன.

தங்களது சுயநலத்துக்காக சமுகத்திற்கு அவப்பெயரை உருவாக்குவதை இந்த முஸ்லிம் கட்சிகள் முதலில் கைவிட வேண்டும்.

தேர்தல் மேடைகளில் ராஜபக்ஸ குடும்பத்திற்கும், மொட்டுக்கட்சிக்கும் திட்டித்தீர்த்து தான் இக்கட்சிகள் ஆசனங்களைப் பெற்றன.

அப்போது கசப்பாக இருந்த மொட்டுக் கட்சியும், ராஜபக்ஸ குடும்பமும் இப்போது இனிப்பதற்கு காரணம் என்ன என்பதை சகல மக்களுக்கும் இவர்கள் தெளிவுபடுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *