தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பில் அமெரிக்கா பேச்சு

சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் கடற்றொழில்சார் செயற்பாடுகள் தொடர்பாக, இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் மார்டின் ரி ஹீலி – கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையில் சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நேற்று(13) திங்கட்கிழமை குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இச்சந்திப்பின்போது, தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக கேட்டறிந்த அமெரிக்க பதில் தூதுவர், தமிழ் மக்களின் அபிலாசைகள் தொடர்பாக தமிழர் தரப்புக்களிடம் ஒருமித்த கருத்து நிலவுவது முக்கியம் என்ற கருத்தினை முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த டக்ளஸ் எம்பி மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தாத – நியாயமான வழிமுறைகளைப் பின்பற்றுகின்ற தரப்புக்களுடன் இணைந்து செயற்படுவதற்கான சமிக்கைகளை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

ஆனால் ஏனைய சில தரப்புக்கள் சுயலாபங்களுக்காக மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய தோற்றுப்போன வழிமுறைகளையே தொடர்ந்தும் பேசுவதாக குறிப்பிட்டார்.

அத்துடன் கடந்த காலங்களில் தன்னால் வெளிப்படுத்தப்பட்ட எதிர்வுகூறல்கள் சரியானது என்பதை வரலாறு நிரூபித்திருப்பதனையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், காணாமல் போனோர் விவகாரத்திற்குப் பரிகாரம் காண்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அணுகுமுறைகள் தொடர்பாகவும் புலம்பெயர் தமிழ் மக்களுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆர்வம் வெளியிட்டுள்ள நிலையில், அதுதொடர்பில் தன்னால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விடயங்கள் தொடர்பாகவும் அமெரிக்கத் தரப்பிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெளிவுபடுத்தினார்.

அதேபோன்று, கடற்றொழில் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும், கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளுகின்ற சவால்கள் தொர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அமெரிக்காவின் உதவித் திட்டங்கள் பற்றியும் அவற்றின் அவசியம் பற்றியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமெரிக்காவின் இலங்கைக்கான பதில் தூதுவருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *