டெங்கு மற்றும் கொரோனாவின் இரட்டைச் சுமையை இலங்கை எதிர்கொண்டுள்ளது – மக்களுக்கு எச்சரிக்கை!

டெங்கு மற்றும் கொரோனாவின் இரட்டைச் சுமையில் இலங்கை சிக்கியுள்ளதால், பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக பொதுமக்கள் எச்சரிக்கையாகவும் விழிப்புடனும் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த தசாப்தத்தில் மிகக் குறைவான டெங்கு வழக்குகள் பதிவாகிய ஆண்டாக 2020 இருந்ததாகவும் இந்த ஆண்டில் குறிப்பாக நவம்பர் மாதத்தில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை கவலையளிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது கொழும்பிலும் நாட்டின் ஏனைய  பகுதிகளிலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும் பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக வழக்குகள் அதிகரிக்கும் வாய்ப்பு எப்போதும் உள்ளதாகவும் இரண்டு தொற்றுநோய்களும் ஒரே நேரத்தில் தாக்கினால், நிலைமை நிச்சயமாக பயங்கரமாக இருக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

எனவே, மக்கள் சுகாதார விதிகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்து, தொற்றுநோயைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதேவேளை, கொழும்பு மாநகரசபையில் நாளொன்றுக்கு சுமார் 10 கோரோனா நோயாளிகள் மாத்திரமே கண்டறியப்படுவதாகவும் இறப்பு எண்ணிக்கையும் திருப்திகரமான மட்டத்தில் இருப்பதாகவும் வைத்தியர் விஜயமுனி தெரிவித்தார்.

தற்போது, ​​20 இறப்புகளுடன் தினசரி சுமார் 740 கொரோனா வழக்குகள் பதிவாகும் அதேவேளையில் டிசம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை 1,500 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன என அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4 ஆயிரத்து 561 டெங்கு வழக்குகள் நவம்பர் மாதத்தில் பதிவாகியுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *