தலையை அடமானம் வைத்துத்தான் எமது சமூகத்திற்கான அரசியலை செய்து வருகிறோம் – ஹரீஸ்

நாங்கள் எங்கள் தலையை அடமானம் வைத்துத்தான் சமூகத்திற்கான அரசியலை செய்து வருகிறோம். எங்கள் முடிவுகள் பல வெற்றிகளை சமூகத்திற்காக பெற்றுத் தந்ததுள்ளது என  நாடாளுமன்ற  உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்   எச்.எம்.எம் ஹரீஸின் 2021ஆம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட  நிதி ஒதுக்கீட்டின் மூலம்  ஒதுக்கீடு

செய்யப்பட்ட நிதியில் தெரிவு செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட மதஸ்தலங்கள், கழகங்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளுக்கான அலுவலக பாவனை பொருட்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் அமைந்துள்ள பிரதேச செயலக கேட்போர் கூடங்களில் பிரதேச செயலாளர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ”அடுத்த தேர்தலை வைத்து நாங்கள் அரசியல் செய்வதாக இருந்தால் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் வெறும் வெற்றுக் கோசத்தோடு மக்களை உணர்ச்சிவசப்படுத்தி வீதியில் நின்றாலே மக்கள் எம் பின்னால் அணி திரள்வார்கள்.

இந்த அரசியலை நாங்கள் செய்வதற்கு முற்பட்டால் நம் சமூகத்திற்கு ஏற்படும் விளைவுகள் பாரதூரமாக அமைந்து விடுமோ என்ற அச்சம் எங்களுக்குள்ளது. நாங்கள் எங்கள் தலையை அடமானம் வைத்துத்தான் சமூகத்திற்கான அரசியலை செய்து வருகிறோம். எங்கள் முடிவுகள் பல வெற்றிகளை சமூகத்திற்காக பெற்றுத் தந்ததுள்ளது.

ஆயிரம் ஆயிரம் பிரச்சினைகள் நம் சமூகத்தில் தேங்கி கிடக்கிறது. இவற்றுக்கான தீர்வை நோக்கியே நாம் பயணிக்க வேண்டும். அதை விட்டு விட்டு மக்களை பலிக்கடாவாக்கி நாம் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பது பெரும் அயோக்கியத்தனமானதாகவே நாங்கள் பார்க்கிறோம். மருந்து கசப்பானதுதான் அதை பருகுவதன் மூலமே நமக்கு பிடித்த நோய் நம்மை விட்டு பிரியும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *