தரம் தொடர்பான சிக்கல் காரணமாக லிட்ரோ நிறுவனம் இலங்கைக்கு இறக்குமதி செய்திருந்த எரிவாயுவை திருப்பி அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தால் அண்மையில் நாட்டுக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட எரிவாயுவை திருப்பி அனுப்ப அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த எரிவாயுவில் உரிய செறிமானத்துடன் கூடிய எ(த்)தில் மேகெப்டன் உள்ளடங்காமை கண்டறியப்பட்டுள்ளது.
எரிவாயுவின் தரம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை அறிக்கைகள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை, தரமற்ற சமையல் எரிவாயுக்களை சந்தைக்கு விநியோகித்ததன் ஊடாக ஏற்பட்ட அனர்த்தங்களுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படவுள்ளது.
இந்த வழக்கு அடுத்த வாரம் தொடரப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தமது அதிகார சபையால் முன்னெடுக்க கூடிய சகல செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.