எரிவாயு சிலிண்டரின் கலவை மற்றும் அது சிலிண்டரில் தென்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து அறிவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு நாளை வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.
லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களால் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர்களை மீளப் பெற உத்தரவிடுமாறு கோரி சிவில் சமூக ஆர்வலர் நாகாநந்த கொடித்துவக்கு தாக்கல் செய்த ரிட் மனு இன்று அழைக்கப்பட்ட போது இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ருவன் பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எரிவாயு சிலிண்டரின் கலவை, அந்த கலவை சிலிண்டரில் தென்படும் சாத்தியக்கூறுகள் மற்றும் தற்போது சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ள எரிவாயு சிலிண்டர்களை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புள்ளதா என நீதிபதிகள் குழாம் இதன்போது பிரதிவாதிகளிடம் வினவினர்.
இதன்போது, லிட்ரோ எரிவாயு நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ச அமரசூரிய, இந்த விடயம் தொடர்பாக தனது கட்சிக்காரரிடம் கேட்டறிந்து சமர்ப்பணங்களை முன்வைக்க நாளை வரை கால அவகாசம் பெற்றுத்தருமாறு நீதிமன்றில் கோரியிருந்தார். அதன்படி, மனுவை நாளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டது.