வாழும் சாட்சியங்களாகிய நாம் உயிருடன் இருக்கும்போதே எமது சாட்சிகள் உதாசீனப்படுத்தப்பட்டு வருகின்றன என வடக்கு, கிழக்கைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், புதிய ஆணைக்குழு செயற்பாடு சமகால அரசியல் விவகாரம் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய நாம் இலங்கை அரச படைகளாலும், அதன் துணை ஆயுதக்குழுக்களாலும் கடத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களும், அரச வாக்குறுதிகளை நம்பி எம்மால் கையளிக்கப்பட்டும், தாமாகவே சரணடைந்தும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் நீதி கேட்டு போராடி வருகின்ற நிலையில் 20-02-2017 இலிருந்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.
இன்று 1754 நாளாக போராடிக் கொண்டிருக்கும் நிலையில் எம்முடன் இணைந்து போராடிய 108 உறவுகளை இழந்துவிட்டோம். இந்த 108 பேரும் தமது உறவுகளின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சாட்சிகளாகும்.
நாம் கூட நோய்வாய்ப்பட்டு தமது வாழ் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம். வாழும் சாட்சியங்களாகிய நாம் உயிருடன் இருக்கும்போதே எமது சாட்சிகள் உதாசீனப்படுத்தப்பட்டு வருகின்றன.
எத்தனையோ ஆணைக்குழுக்களிடம் எமது சாட்சிகளை அக்கறையுடன் பதிவு செய்யச் சென்றோம். அங்கு நாம் கண்டது அவர்கள் நாம் கூறியவற்றை பதிவு செய்யாது ஆடு வேண்டுமா கோழி வேண்டுமா? என்ற கேள்விகளைக் கேட்டு எம் தேடல்களையும், எம் உறவுகள் மீது நாம் கொண்டுள்ள அன்பையும் கொச்சைப்படுத்தினர்.
இதை விட நாம் எமது கண்ணீர்க் கதைகளை நெஞ்சடைக்க கூறியவற்றை தாலாட்டாக எடுத்து அவர்கள் நித்திரை கொண்டது கூட ஊடகங்களில் வெளிவந்தது.
இப்படியான கசப்பான அனுபவங்களாலும் இலங்கை அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் எமக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு ஒரு நீதியா என வெளிப்படையாகவே செயல்பட்டதாலும் சர்வதேசத்திடம் நீதி கேட்டு போராடி வருகின்றோம்.
கைக்குழந்தைகளுடனும், சிறார்களுடனும் குடும்பமாக சரணடைந்தவர்களில் 20 க்கும் மேற்பட்ட சிறார்களின் நிலையை அறிய ஆணைக்குழுக்களுக்கு சென்று சாட்சியங்கள் பதிவு செய்தும் பதில் ஏதுமில்லை.
ஐ.நாவின் 30இன் கீழ் 1 தீர்மானத்திற்கமைய உருவாக்கப்பட்டதாக கூறப்படும் ‘காணாமல் போனோர் அலுவலகம்’ கூட எமது நோக்கத்தை நிறைவேற்றவில்லை.
ஐ.நா உயரதிகாரிகளின் அபிப்பிராயங்களுக்கு அமைவாக காணாமல் போனோர் அலுவலகத்திற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி ஐந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவரங்களைக் கொடுத்து இரண்டு வருடங்கள் கழிந்தும் தீர்வு எதுவுமின்றி தன் இயலாமையை உறுதிப்படுத்தி நிற்கின்றது.
அதன் இயலாமையை ஆரம்பத்திலிருந்து கூறி அதை நிராகரித்த போதும் ஏற்றுக்கொள்ளாத சர்வதேசம் தற்போது உண்மையை விளங்கிக் கொண்டிருக்கும்.
எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை சர்வதேசம் புரிய தொடங்கியிருக்கும் இந்நிலையில் அரசாங்கம் ஜெனிவாவுக்கு அனுப்புவதற்கு சாட்சியங்களைத் திரட்டும் சாக்கில் பல சோடிக்கப்பட்ட தகவல்களை அனுப்புவதற்காக ஒரே நாடு ஒரே சட்டம் எனும் பெயரில் புதிதாக ஒரு ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு மதவெறி, இனவெறி என்பவற்றுக்கு பெயர்போன ஒருவரை தலைவராக்கி சாட்சியங்களைச் சோடிக்கிறார்கள். இந்நிகழ்வு நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திலும், நேற்றைய தினம் கிளிநொச்சியிலும் இக்குழு தன் வரிசையைக் காட்ட வந்திருந்தது.
யாழ்ப்பாணத்தில் கூலிக்கு அமர்த்தப்பட்டவர்கள் சொல்லிக்கொடுத்த கதைகளை ஒப்புவித்தார்கள். மேலும் சமூக விரோத செயல்களான கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவற்றிற்காக தண்டனை பெற்றவர்களும், புது கதையைக் கூறத் தொடங்கி இருக்கின்றார்கள்.
தண்டனை சரியா பிழையா என்பதல்ல நமது கேள்வி. பத்துக்கு மேற்பட்ட ஆணைக்குழுக்கள் தங்களிடம் சாட்சியங்கள் பதிவு செய்யும்போது இவர்கள் எங்கே போனார்கள்? தற்போது நல்ல கதாசிரியர் தலைமையின் நாடகங்கள் அரங்கேறுகின்றன.
நேற்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாகிய நாம் இந்த ஆணைக்குழுவின் வருகையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோம்.
எவருமே எமது பிரதேசத்தில் இருந்து ஆணைக்குழுவிற்கு செல்லாத நிலையில் மன்னாரில் இருந்து பேருந்தில் மக்களைக் கூட்டிவந்து சாட்சியளிக்க வைத்தார்கள்.
எமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வேலைக்கு ஆட்களை திரட்டிக் கொடுத்தது மன்னாரிலுள்ள ஒரு நிறுவனம்.
தமிழர் பாதிக்கப்பட்டவர்களுக்கென வெளிநாடுகளில் பணம் பெற்று ஏப்பமிடும் நிறுவனங்கள் அரசுக்கு துணை போய் மேலும் மேலும் தமது சட்டைப் பைகளை நிரப்புவதில் குறியாகவுள்ளார்கள்.
இதை மக்களாகிய நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பச்சைத் துரோகச் செயலுக்கு உடந்தையாக இருப்பவர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கி வைத்து நம் சமூகத்தை துப்புரவு செய்யுங்கள்.
சர்வதேச நாடுகளுக்கும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கின்றோம், உங்களுக்காக பொய்யான தகவலை ஜோடிக்கப்பட்டு படமாக்கப்பட்டு வருகின்றது. தயவுசெய்து இவற்றை நம்பிவிடாதீர்கள்.
சர்வதேச திரைப்பட விழாவிற்கு அனுப்பினால் பரிசு பெறக்கூடிய இந்தப் படத்திற்கு எந்த உண்மை கதையும், மூலமும் இல்லை. எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை அதன் தாக்கத்தை மறைப்பதற்கும், குறைப்பதற்குமான முயற்சியே இது என தெரிவித்துள்ளனர்.