வடக்கில் மாகாண ஆளுநரின் அனுமதியைப் பெற்று வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட உள்ளுராட்சிமன்ற வீதிகளை வெளிநாட்டு நிதிப்பங்களிப்பில் மீள்புனரமைப்பு செய்வதற்கு, ஆளுநர் முன்வரவேண்டும் என யாழ். கோப்பாய் பிரதேச சபையின் தலைவர் சமாதான நீதிவான் இ.மயில்வாகனம் கேட்டுள்ளார்.
போருக்கு பின்னரான வடக்கு மாகாண உள்ளுராட்சி சபை அபிவிருத்தி தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் 5 மாவட்டத்திலும் மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை என 34 உள்ளுராட்சி சபைகள் உள்ளன.
ஒவ்வொரு உள்ளுராட்சி சபைகளிலும் 550 முதல் 950 வரையிலான சபை வீதிகள் ஆளுநரின் அனுமதிகளைப் பெற்று வர்த்தமானிகளில் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், போர் ஒய்வு பெற்று 11 வருடங்கள் கழிந்த நிலையிலும் வடக்கு மாகாணத்தின் கீழ் உள்ள பிரதேச சபை, நகர சபை, மாநகர சபை உட்பட்ட சபைகளுக்கு உரித்தான சபை வீதிகள் மீள்புனரமைப்பு இன்றி போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் அனேகமான வீதிகள் காணப்படுகின்றன.
தற்போது, வடமாகாண ஆளுநரின் அனுமதிகளைப் பெற்று வடக்கில் உள்ள உள்ளுராட்சி சபைகள் வீதிகளின் முழு விபரங்களை உள்ளடக்கியதாக வர்த்தமானியில் படிப்படியாக பிரசுரித்து வருகின்றன.
இவ்வாறு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு சபையில் உள்ள வீதிகளை வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வெளிநாட்டு நிதிகளைப்பெற்று அபிவிருத்தியின்றி காணப்படும் சபை வீதிகளை தார் வீதியாகவோ அல்லது காப்பெற் வீதியாகவோ உடன் மீன்புனரமைப்பு செய்ய முன்வரவேண்டும்.
மேற்படி வீதி தொடர்பான அனைத்து விடயங்களும் வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சு செலாளரிடம் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.