மன்னாரில் முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையை பாராட்டிய மறைமாவட்ட ஆயர்

மன்னார் மறைமாவட்ட பராமரிப்பில் உள்ள முன் பள்ளி ஆசிரியர்கள், கொரோனா தொற்று காலப்பகுதியில் முன் பள்ளி மாணவர்களுக்கு மேற்கொண்ட சேவையையும், முயற்சிகளையும் பாராட்டுகின்றோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் உள்ள திரு அவையின் தேவையில் உள்ளோருக்கு உதவும் கத்தோலிக்க சர்வதேச உதவி வழங்கும் நிறுவனத்தின் நிதி அனுசரணையில்,மன்னார் மறைமாவட்ட பராமரிப்பில் உள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விசேட உதவி திட்டம் வழங்கும் நிகழ்வு மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தில் இன்று புதன்கிழமை (15) காலை 10 மணியளவில் இடம் பெற்றது.

மன்னார் மறைமாவட்ட விசேட திட்டங்கள் மற்றும் இளைஞர் ஆணைக்குழு இயக்குனருமான அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது மன்னார் மறைமாவட்ட பராமரிப்பில் உள்ள 171 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மன்னார் மறைமாவட்ட ஆயரினால் விசேட உதவி திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

அவர் மேலும் தெரிவிக்கையில்..,

முன்பள்ளி ஆசிரியர்களாகிய நீங்கள் ஆற்றி வருகின்ற பணி மன்னார் மறை மாவட்டத்திற்கு பாரிய பங்கினை வகிக்கின்றது.முன் பள்ளி என கூறும் போது கல்வியை ஆரம்பிக்கும் ஓர் அடித்தளமாகும்.

மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதற்கு முன்பாக தமது ஆரம்பக் கற்றலை கற்றுக் கொடுக்கும் அந்த கால கட்டத்தில் முன் பள்ளி ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.

மேலும், முன்பள்ளி ஆசிரியர்களாகிய நீங்கள் மாணவர்களின் உருவாக்கத்திற்கு பாரிய பங்களிப்பு செய்கின்றீர்கள்.

எனவே உங்கள் சேவையை பாராட்டுகிறேன்.கொரோனா தொற்று காரணமாக முன் பள்ளியை நடத்த முடியாத நிலையில் ஆசிரியர்களாகிய நீங்கள் பல்வேறு இடையூரை சந்தித்துள்ளீர்கள்.

அவ்வாறான சந்தர்ப்பத்திலும் சில ஆசிரியர்கள் மாணவர்களை தனியாக அழைத்து அவர்களுக்கு கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளீர்கள்.

உங்கள் முயற்சிகளை நாங்கள் ஏற்று பாராட்டுகின்றோம்.என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *